புதுடெல்லி,மக்களவையில் பட்ஜெட் மீதான விவாத்தின்போது, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது;-
நாம் ஒரு உலகளாவிய புயலை எதிர்கொள்கிறோம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். ஒரு வல்லரசின் சகாப்தம் முடிந்துவிட்டது, புவிசார் அரசியல் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன, எரிசக்தி மற்றும் நிதி ஆயுதமயமாக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த யதார்த்தத்தை ஒப்புக்கொண்ட போதிலும், அமெரிக்கா நம்மை பாதிக்கும் வகையில் எரிசக்தி மற்றும் நிதி அமைப்புகளை ஆயுதமயமாக்க அனுமதித்துள்ளீர்கள்.
ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து எண்ணெய் வாங்க முடியாது என்று அமெரிக்கா கூறும்போது, நமது எரிசக்தி பாதுகாப்பு வெளிப்புறமாக ஆணையிடப்படுகிறது. எரிசக்தியே நமக்கு எதிராக ஆயுதமயமாக்கப்படுகிறது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் எரிசக்தி துறையில் நமது பாதுகாப்பு பறிபோய்விட்டது. இதற்கு நீங்கள் வெட்கப்படவில்லையா? இந்தியாவின் நலன்களை நீங்கள் சமரசம் செய்துவிட்டீர்கள்.
அமெரிக்கா தன்னை சர்வாதிகாரியாக காட்டிக்கொள்ள இந்தியாவை பயன்படுத்துகிறது. இப்படி நீங்கள் செய்வதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் ‘பாரத மாதா’வை விற்று விட்டீர்கள்.
பிரதமர் இதெல்லாம் பலனின்றி செய்ய மாட்டார். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது கழுத்தை நெறித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தை காணலாம். எப்ஸ்டீன் கோப்புகளில் இன்னும் வெளிவராத 30 லட்சம் பக்கங்கள் இருக்கின்றன.
பாகிஸ்தானின் ராணுவத் தளபதியை காலை உணவுக்கு அழைத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உபசரித்தார். ஆனால், இந்த அரசு அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இந்தியா மீதான வரி 3 சதவீதத்தில் இருந்து தற்போது 18 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் நலன்களை நசுக்கும்.
போர் சகாப்தம் முடிந்துவிட்டதாக பிரதமர் மோடியும், பாதுகாப்பு ஆலோசகரும் சில நாள்களுக்கு முன் தெரிவித்தார்கள். ஆனால், நாம் போர் சகாப்தத்துக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உக்ரைன், காசா, மத்திய கிழக்குகளில் போர் நடைபெற்று வருகின்றன. ஈரானில் போர் அச்சுறுத்தல் இருக்கிறது. நாமும் ஆபரேஷன் சிந்தூரை சந்தித்தோம்.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கு இடையிலான போட்டியில், மிகவும் மதிப்புமிக்க ஒரு சொத்து இந்திய தரவுகள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா வல்லரசாக தொடர விரும்பினால், டாலரைப் பாதுகாக்க விரும்பினால், அதற்கான வழி இந்தியர்கள்தான். மக்கள்தொகை கூடுவது சுமை என்றும், பேரழிவு என்றும் பலர் சொல்கிறார்கள். ஆனால், மக்கள்தொகை தான் நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து. அது நமது பலம்.
அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது. அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும்.
அதானியின் வழக்கை காட்டி பிரதமர் மோடியின் கழுத்தை அமெரிக்கா நெறித்துவிட்டது. ஏ.ஐ தொழில்நுட்பத்திற்கு எரிபொருளாக இருக்கும் தரவுகளை, வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகளை இலவசமாக அமெரிக்காவுக்கு செல்வதற்கு மோடியின் பாஜக அரசு வழி கொடுத்துள்ளது.
இயந்திரமாக்கப்பட்ட அமெரிக்காவின் பிரமாண்டமான விவசாயத்துறை, இந்திய விவசாயிகளை அழிக்கப் போகிறது.
மோடி உள்பட எந்தவொரு பிரதமரும் இதுபோன்ற ஒப்பந்தத்தில், நெருக்கடி இல்லாமல் கையெழுத்திட மாட்டார்கள் என நம்புகிறேன்.
இந்தியாவில் கடந்த காலங்கள் போன்று தற்போது உணவுப் பொருள் தட்டுப்பாடு இல்லை. தங்கம், வெள்ளி விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவைப் பற்றி எல்லாம் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இந்தியா எதிர்கொண்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகள் குறித்து எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அவையில் உரையாற்ற சுதந்திரம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

