Last Updated:
Virat Kohli : விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 46.85 ரன்களுடன் மொத்தம் 9,230 ரன்களை விளாசியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று (மே 12) அறிவித்துள்ளார். அவரது ஓய்வுக்கு பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா உருக்கமான பதிவு ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகையாக அனுஷ்கா சர்மா இருந்து வருகிறார். மைதானங்களில் பல முறை அவரை உற்சாகப்படுத்தி கிரிக்கெட்டில் பல சாதனைகளை அடைய அனுஷ்கா சர்மாவும் உத்வேகப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு குறித்து அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தைப் பகிர்ந்து கொண்ட அனுஷ்கா, “மக்கள் சாதனைகள் மற்றும் மைல்கற்களைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் நீங்கள் ஒருபோதும் காட்டாத கண்ணீர், யாரும் பார்க்காத சண்டைகள் மற்றும் விளையாட்டு மீதான உங்கள் தீராத அன்பு ஆகியவற்றை நான் நினைவில் கொள்வேன்” என்றுள்ளார்.
மேலும், “இதெல்லாம் உங்களிடமிருந்து எவ்வளவு எடுத்தது என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்குப் பிறகும், நீங்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும், கொஞ்சம் பணிவாகவும் திரும்பி வந்தீர்கள். இந்த பயணத்தில் நீங்கள் வளர்வதைப் பார்ப்பது ஒரு பாக்கியம். நீங்கள் எப்போதும் உங்கள் இதயத்தைப் பின்பற்றினீர்கள், எனவே என் அன்பே, இந்த பிரியாவிடையின் ஒவ்வொரு துளியையும் நீங்கள் சம்பாதித்துவிட்டீர்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.” என்றுள்ளார்.

இந்த பதிவிற்கு அனுஷ்கா சர்மா ஒரு அழகான புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் இருவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்ற அந்தப் போட்டியின் படம் இது. படத்தின் பின்னணியில் உள்ள பலகையிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது.
முன்னதாக, விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், இந்த முடிவை எடுப்பது கடினம் என்றும், ஆனால் இப்போது சரியான நேரம் என்று உணர்ந்ததாகவும் அவர் எழுதினார். கோஹ்லி தனது சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் தன்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனது டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைவில் கொள்வேன் என்று அவர் கூறினார்.
விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 46.85 ரன்களுடன் மொத்தம் 9,230 ரன்களை விளாசியுள்ளார். இதில் 30 சதங்களும், 31 அரைசதங்களும் அடக்கம்.
Chennai,Tamil Nadu


