Last Updated:
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா 17 கோடிக்கும் அதிகமான மக்களை தீவிர வறுமையிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றியதாக உலக வங்கி பாராட்டியது.
நடப்பு 2025ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்த ஆண்டில் இந்தியா வளருமா என்ற நிலையில் இருந்து மாறி, எவ்வளவு விரைவாக வளரும் என்பதே உலக நாடுகளின் பேசுபொருளாக மாறியிருக்கிறது. பொருளாதார நிச்சயமற்ற தன்மை, உள்நாட்டு குழப்பம், அடிக்கடி கொள்கை மாற்றம் போன்றவற்றால் தத்தளித்து வரும் உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா தனித்து நிற்கிறது. குறிப்பாக, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியது, பயனாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் போன்றவற்றால் சமத்துவ சமூகத்தை உருவாக்கிய நாடுகள் பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜி7 நாடுகள் மற்றும் ஜி20 நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்திருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. சுமார் 94 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்த நாடாக இந்தியாவை அங்கீகரித்தது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.
18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியான எஸ்&பி குளோபல் இந்தியாவின் நீண்ட கால கடன் மதிப்பீட்டை ‘பிபிபி மைனஸிலிருந்து ‘பிபிபி’ ஆக உயர்த்தியது. யுபிஐ பணப்பரிவர்த்தனையை உலகின் மிகப்பெரிய நிகழ் நேர பணம் செலுத்தும் அமைப்பாக சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்தது. அத்துடன், இந்தியாவின் தீர்க்கமான சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல் புரட்சியை வெகுவாகப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிரிஸ்டலினா ஜார்ஜியெவா, உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய மையமாக இந்தியா இருப்பதாக பெருமிதம் தெரிவித்திருந்தார். உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, அறிவுசார் சொத்து முதலீட்டில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை அங்கீகரித்தது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா 17 கோடிக்கும் அதிகமான மக்களை தீவிர வறுமையிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றியதாக உலக வங்கி பாராட்டியது. ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில் இந்தியா, உலகளவில் 167 நாடுகளில் முதல் முறையாக 100 இடங்களுக்குள் இடம்பிடித்தது. வலுவான பொருளாதார கட்டமைப்பு, வருமான வளர்ச்சி மற்றும் நீண்டகால கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் உலகளாவிய முதலீட்டாளர் நம்பிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறி, உலகளாவிய தரகு நிறுவனமான ‘கோல்ட்மேன் சச்ஸ்’ இந்திய பங்குச் சந்தையை ஓவர்வெயிட் நிலைக்கு மேம்படுத்தியது. யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் இந்தியாவின் தீபாவளி பண்டிகை இடம்பெற்றது. இதேபோன்று, மராத்திய பேரரசின் ராணுவ தளங்களை உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம், ஏழைகள் உட்பட லட்சக்கணக்கான மக்களை முறைப்படியான நிதிமுறைக்குள் கொண்டுவர உதவியதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்தது. 75 விழுக்காடு ஆதரவுடன் உலகின் மிகவும் பிரபலமான மக்களாட்சித் தலைவராக பிரதமர் மோடி உருவெடுத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த தரவு பகுப்பாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் அடிப்படையில் ராணுவத் திறன், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் ஜப்பான், ரஷ்யா நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஆசியா பவர் இண்டெக்ஸ்-2025-ல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, செயற்கை நுண்ணறிவில் இந்தியா உலகின் மூன்றாவது போட்டித்திறன் கொண்ட நாடாக உயர்ந்தது. பேங்க் ஆப் அமெரிக்காவின் நிதி மேலாளர் கணக்கெடுப்பின்படி, இந்தியா ஜப்பானை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகவும் விருப்பமான சந்தையாக மாறியிருப்பது தெரியவந்தது. உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சிப் பாதையைத் தக்கவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 2047-ஆம் ஆண்டில் வளர்ந்த நாடாக மாறும் இலக்குடன் இந்தியா செயல்பட்டு வருகிறது.
நிலையான வளர்ச்சி, வலுவான பொருளாதாரம்.. உலக நாடுகள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்த இந்தியா!


