Last Updated:
சந்திரயான் 3 தென்துருவத்தில் பனிக்கட்டிகள் இருப்பதற்கான சாத்தியங்களை கண்டறிந்தது. இது நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.
நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய தென்துருவ துருவ பகுதியில் பல இடங்களில் பனிக்கட்டிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
2023 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23- ஆம் தேதி நிலவின் தென்துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்துக்கு சிவ சக்தி முனை என பிரதமர் மோடி பெயரிட்டார். சிவ சக்தி முனையில் தட்பவெப்ப நிலை கடுமையான ஏற்ற இறக்கங்களை கொண்டிருப்பதாக அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இங்கு வெப்ப நிலை பகல் நேரத்தில் 82 டிகிரி செல்சியஸ் வரையும், இரவு நேரத்தில் மைனஸ் 170 டிகிரி வரையும் நிலவுகிறது. ஆனால், அந்த பகுதிக்கு ஒரு மீட்டர் தூரத்தில், வெப்பநிலை 59 டிகிரி செல்சியசாக உள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நிலவில் ஏற்படும் குறிப்பிடத்தக்க வெப்பநிலை மாறுபாடு காரணமாக பனிக்கட்டிகள் உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். தென்துருவ பகுதியில், சூரிய ஒளிபடாத இடங்களில் குளிர்ந்த வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த பனிக்கட்டிகளை ஆய்வு செய்யும்போது, இதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்கள் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : சார்ட்டர்டு விமானத்தை அதிரடியாக பறிமுதல் செய்த அமலாக்கத்துறை.. என்ன காரணம்?
நிலவில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய பனிக்கட்டி முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும், நிலவில் நீண்ட காலம் இருப்பதற்கு, பனிக்கட்டியை பிரித்தெடுத்து பயன்படுத்தும் தொழில்நுட்பங்களையும், உத்திகளும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைவர் துர்கா பிரசாத் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இதில் பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளன. உயிர்வாழ தேவையான தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை குறிப்பிட்ட அளவு மட்டுமே ராக்கெட்டில் எடுத்துச் செல்ல முடியும்.
தற்போது மனிதர்கள் நிலவில் தரையிறங்குவதற்கு சிறந்த இடம் எது என்பதை சந்திரயான் 3 கண்டுபிடித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு, மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.
நிலவில் உள்ள பனிக்கட்டிகள் மூலம் கிடைக்கும் தண்ணீர், விண்வெளி வீரர்கள் குடிப்பதற்கு மட்டுமல்ல, நீர் மூலக்கூறுகளை ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனாகப் பிரிப்பதன் மூலம் ராக்கெட் எரிபொருளாக மாற்றவும் முடியும். இதனால் செலவு குறையும் என்றும் கூறப்படுகிறது.
March 09, 2025 6:15 PM IST