Last Updated:
TN Agriculture Budget 2025 | தமிழ்நாட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் சிறு, குறு உழவர்கள். வேளாண் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் முதியோர் ஓய்வூதியத் தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, இறுதிச்சடங்கு நிவாரணத்தொகை, கல்வி உதவித்தொகை, ஆகியவை வழங்கப்படுகின்றன.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் நிதி உதவிகள் உயர்த்தப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறு, குறு உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் முதியோர் ஓய்வூதியம், மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, இறுதிச்சடங்கு நிவாரணத்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
வேளாண்மையை நம்பியுள்ள நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், சாகுபடிக்காலங்களில் கிடைக்கும் பணிகளைப் பொறுத்து அமைவதாகவும், இயற்கைப் பேரிடர்களால் பயிர் சாகுபடி பாதிக்கப்படும்போது உழவர்களுடன் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க : விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சோலார் பம்பு செட்டுகள் : வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு
எனவே, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்கான இழப்பீடு ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.2 இலட்சமாகவும், விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி ரூ.20,000 லிருந்து ரூ.1 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
மேலும், இயற்கை மரணத்துக்கான நிதி உதவி ரூ.20,000 லிருந்து ரூ.30,000 ஆகவும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2,500 லிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் விளிம்பு நிலையிலுள்ள நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் குடும்ப நலன் பாதுகாக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
March 15, 2025 12:10 PM IST


