போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் 670 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மண்ணை தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் உள்ள யம்பலி கிராமத்தில் கடந்த 25ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. முதல் கட்டமாக நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல 1182 வீடுகள் மண்சரிவில் புதையுண்டுள்ளன.
மொத்தமாக 6க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இன்று காலை வெளியான தகவலின்படி மொத்தம் 670 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களிலிருந்து வரும் ட்ரோன் காட்சிகள் நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது. பெண்கள் தங்கள் உறவினர்களை தேடி கதறி அழுதிருக்கிறார்கள்.இது குறித்து பிரதமர் ஜேம்ஸ் மராப் கூறுகையில், “மீட்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறேன். உயிரிழப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அது கிடைக்கப்படும்போது பகிரப்படும். நிலச்சரிவில் தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.பக்கத்து நாடான ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் கூறுகையில், “மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் உள்ள தடைகள் அகற்றப்பட்டால்தான் மீட்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கும்.பப்புவா நியூ கினியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார். இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்கிறோம்.
பக்கத்து நாடான ஆஸ்திரேலியா எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும்” என்று கூறியுள்ளார். நிலச்சரிவு குறித்த மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மீட்பு பணிகள் முழு வீச்சை எட்டும்போது உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து ஐநா கூறுகையில், “நிலச்சரிவு காரணமாக பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது வரை ஹெலிகாப்டர்கள் மட்டுமே மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. எனவே மீட்பு பணிகள் மேலும் சில நாட்கள் வரை தொடரும். நாங்கள் குடிநீர் மற்றும் உணவை விநியோகிக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறியுள்ளது.
பேரிடர் மீட்பு படையினரின் வருகை தாமதமாவதால், உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். வீடுகள் 8 மீட்டர் ஆழத்தில் புதைந்துள்ளதால் எங்கு மக்கள் புதைந்திருக்கிறார்கள் என்று தெரியாமல் மக்கள் எல்லா இடங்களிலும் தோண்ட தொடங்கியுள்ளனர். கூடுதலாக மீட்பு படையினர் தேவைப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.