Last Updated:
இந்தியாவில் நீங்கள் வாங்கும் சம்பளத்தில் 20% சேமிப்பதில் கிடைக்கும் தொகையைவிட ஜப்பானில் 20% சேமித்தால், கிடைக்கும் தொகை மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம்.
கூடிய விரைவில் அதிகமான இந்தியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வார்கள் எனக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஜெர்மனி, ஜப்பான், பின்லாந்து மற்றும் தைவான் ஆகிய நான்கு நாடுகள் இந்திய தொழிலாளர்களை தீவிரமாகப் பணியில் அமர்த்தி வருகின்றன. அதுவும் இந்தியாவில் கிடைப்பதைவிட மூன்று முதல் நான்கு மடங்கு அதிக சம்பளத்தை இந்த நாடுகள் வழங்குகின்றன.
திறமையான இந்திய தொழிலாளர்களுக்கு ஜெர்மனி மிகப்பெரிய இடமாக உருவெடுத்துள்ளது. மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் நிபுணர்களின் பெரும் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ஜெர்மனி, ஒவ்வொரு ஆண்டும் 90,000 திறமையான பணி விசாக்களை இந்தியர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஜெர்மனியில் இந்திய பணியாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 500% அதிகரித்துள்ளது. இங்கு பணிபுரியும் இந்திய நிபுணர் சராசரியாக மாதத்திற்கு சுமார் 6 லட்சம் சம்பாதிக்கிறார்.
ஐடி ஊழியருக்கு ஜெர்மன் மொழித் தேர்ச்சி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை. மேலும் மென்பொருள் மேம்பாட்டில் முறையான பட்டம் இல்லாதவர்கள்கூட இரண்டு வருட கோடிங் அனுபவத்துடன் தகுதி பெறலாம். ஜெர்மனியில் ஐடி வல்லுநர்கள் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள், அதே நேரத்தில் மருந்து மற்றும் ரசாயனத் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்கள் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,00,000 இந்திய தொழிலாளர்கள் இடம்பெயர அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளது ஜப்பான். பொறியாளர்கள் மற்றும் ஐடி நிபுணர்களை பணியமர்த்துவதில் ஜப்பான் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இங்கு சராசரி சம்பளம் ஆண்டுக்கு சுமார் ரூ.40 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிபுணர்களுக்கு பின்லாந்து கவர்ச்சிகரமான நாடாக மாறி வருகிறது. பின்லாந்து அல்லது ஸ்வீடிஷ் மொழிகளில் தேர்ச்சி பெறக்கூடிய முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இப்போது நிரந்தர வதிவிட (PR) வாய்ப்பை வழங்குகிறது.
கடந்த பத்தாண்டுகளில் பின்லாந்தில் இந்தியர்களின் எண்ணிக்கை 350% அதிகரித்துள்ளது. மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் திறமையான நிபுணர்களுக்கு பின்லாந்து அரசாங்கம் ஐரோப்பிய யூனியன் நீல அட்டையையும் வழங்குகிறது. இது ஐரோப்பாவில் நீண்ட காலம் வாழ்ந்து வேலை செய்வதை எளிதாக்குகிறது.
உற்பத்தித் துறையில் இந்தியாவை தைவான் எதிர்நோக்குகிறது. கலாச்சார ஒற்றுமைகள் காரணமாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் இந்நாடு ஆர்வமாக உள்ளது.
October 31, 2025 3:20 PM IST


