Last Updated:
முக்கிய தலைவர்கள் சென்ற ரயிலை குறிவைத்து தான் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகில் யாஹோடின் (Yahodyn) ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், சுவீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் உள்ளிட்டோர் சிறப்பு ரயிலில் போலந்து எல்லை நோக்கி பயணித்தனர்.
போலந்து எல்லையோர பகுதியான யாஹோடின் ரயில் நிலையத்தில் இருந்து இந்த சிறப்பு ரயில் பாதுகாப்பு கருதி திட்டமிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றது. அந்த ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதே ரயில் நிலையத்தில் நின்றிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது ரஷ்யாவின் ஆளில்லா டிரோன், வெடிகுண்டு வீசி தாக்கியது. இதில், ரயில் என்ஜின் தீப்பற்றி எரிந்தது.
ரஷ்யாவின் டிரோன் வருவதை முன்கூட்டியே கவனித்த ரயில்வே ஊழியர்கள், அந்த ரயிலில் இருந்த பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. முக்கிய தலைவர்கள் சென்ற ரயிலை குறிவைத்து தான் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

