வெல்லிங்டன்,
மலேசியாவின் துணைப் பிரதமர் மற்றும் அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி, தனது நியூசிலாந்து பயணத்தின் மூன்றாவது நாளை இன்று, வெல்லிங்டனில் நடைபெறும் பல முக்கிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வு களுடன் தொடங்கினார். இந்த பயணம் மலேசியா-நியூசிலாந்து இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு (மலேசிய நேரப்படி 4 மணி), அவர் முதலில் நியூசிலாந்தின் மேம்பாட்டு அமைச்சர் தாமா போடாகாவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில், பூர்வீக சமூகங்களுக்கான மேம்பாட்டு கொள்கைகள் மற்றும் மலேசியா-நியூசிலாந்து இடையிலான உறவை வலுப்படுத்தும் முயற்சிகளில் உள்ள ஒத்துழைப்பை ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர், டேவிட் சீமூருடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டு, இருநாடுகளும் எதிர்கால ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு LOI வை (Letter of Intent) கையெழுத்திட உள்ளனர்.
மேலும், உள்ளூர் முஸ்லிம் சமூகத்துடன் உறவை வலுப்படுத்தும் முயற்சியாக, கில்பிர்னி மஸ்ஜிதுக்கும், நியூசிலாந்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பான FIANZ உறுப்பினர்களுடனான உரையாடல் நிகழ்வுக்கும் அமாட் ஜாஹிட் பங்கேற்க உள்ளார்.
இன்று மதியத்திற்கு பின்னர், நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஏற்பாடு செய்த உத்தியோகபூர்வ விருந்து மற்றும் ஹலால் மன்றத்தின் ஒரு நிகழ்வில் முக்கிய உரையாற்றுவார். இந்த மன்றம் , ஹலால் உணவுத் துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது.
மேலும், உயர்கல்வித் துறையில் இருநாடுகளும் ஒத்துழைக்க, மலேசியா மற்றும் நியூசிலாந்து அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகும் நிகழ்விலும் அவர் பங்கேற்பார்.
நாளை (வியாழன்), விவசாயம், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சருடன் சந்திப்பு மற்றும் நியூசிலாந்தின் தேசிய நெருக்கடி மேலாண்மை மையத்துக்கான விஜயமும் நடைபெறும்.
பிற்பகலில், வெல்லிங்டனில் வசிக்கும் 250க்கும் மேற்பட்ட மலேசியர்களுடன் சந்திப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.
அமாட் ஜாஹிட், இந்த உத்தியோகபூர்வ பயணத்தை ஜூலை 18 (வெள்ளி) அன்று நிறைவு செய்து, கோலாலம்பூருக்குத் திரும்புவார்.




