Last Updated:
விஜய் ஹசாரே தொடரில் சோபிக்காத, ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகியுள்ளது
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
ஒருநாள் தொடரானது ஜனவரி 11-ஆம் தேதி வதோதராவில் நடைபெறும் முதல் போட்டியுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 14-ஆம் தேதி ராஜ்கோட்டிலும், மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி ஜனவரி 18-ஆம் தேதி இந்தூரிலும் நடைபெறவுள்ளன. அனைத்து ஒருநாள் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குத் தொடங்கும்.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் டி20 தொடர் ஜனவரி 21-ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும். அடுத்தடுத்த போட்டிகள் ஜனவரி 23-ஆம் தேதி ராய்ப்பூரிலும், ஜனவரி 25-ஆம் தேதி குவஹாத்தியிலும், ஜனவரி 28-ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும். இந்தத் தொடரின் கடைசி டி20 போட்டி ஜனவரி 31-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடத்தப்பட உள்ளது. டி20 போட்டிகள் அனைத்தும் இரவு 7:00 மணிக்குத் தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படவுள்ளது. இதையொட்டி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இன்று கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்யவுள்ளனர்.
சுப்மன் கில் கேப்டனாக தேர்வு செய்யப்படவிருக்கும் நிலையில், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நட்சத்திர வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அதேநேரம் விஜய் ஹசாரே தொடரில் சோபிக்காத, ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கிற டி20 உலகக் கோப்பையை கவனத்தில் கொண்டு பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் முகமது ஷமி மீண்டும் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


