Last Updated:
தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியிருந்தாலும் கடைசி 2 போட்டிகளில் தோல்வியடைந்து பின்னடைவை சந்தித்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளது. முதல் 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.
அடுத்து நடைபெற்ற 4 ஆவது மேட்ச்சில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில் இன்று 5 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்த மேட்ச்சில் இந்தியா வெற்றி பெற்று கம் பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.
இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 18 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியிருந்தாலும் கடைசி 2 போட்டிகளில் தோல்வியடைந்து பின்னடைவை சந்தித்துள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் 4 ரன்னிலும், அபிஷேக் சர்மா 1 ரன்னிலும் வெளியேற, அடுத்து வந்த இஷான் கிஷன் 61 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
நமன் திர் 33 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 22 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 191 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் பின் ஆலன் 2 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து இணைந்த மிட்செல் – டிம் சைபர்ட் இணை இந்திய பவுலிங்கை வெளுத்து வாங்கியது.
மிட்செல் 16 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 29 ரன்கள் எடுத்தார். அடுத்து இணைந்த கிளென் பிலிப்ஸ் தனது பங்கிற்கு 38 பந்துகளில் 3 சிக்சருடன் 65 ரன்கள் குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் டிம் சைபர்ட் 50 பந்துகளில் 5 சிக்சர் 11 பவுண்டரியுடன் 93 ரன்கள் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நியூசிலாந்து அணி 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் 341 ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் இருதரப்பு டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளார்.


