Last Updated:
தற்போது 1.3 பில்லியன் டாலராக இருக்கும் இருதரப்பு வர்த்தகத்தை, அடுத்த ஐந்தாண்டுகளில் 5 பில்லியன் டாலராக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.
சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்தில் 100 சதவீத வரி விலக்கு அளிக்கும் வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் நியூசிலாந்து நாடுகள் தங்களுக்கு இடையேயான நீண்ட கால எதிர்பார்ப்பான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்திய மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் ஒப்பந்தத்தை உறுதி செய்தனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு “முக்கிய மைல்கல்” என்று அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா ஏற்றுமதி செய்யும் அனைத்து 8,284 வகையான பொருட்களுக்கும் நியூசிலாந்து சந்தையில் 100% வரிவிலக்கு அளிக்கப்படும். இதன் மூலம் ஜவுளி, மருந்துப் பொருட்கள், தோல் பொருட்கள் மற்றும் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள் பெரும் பலனடையும். குறிப்பாக, இந்திய மருந்து நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படும்.
அதேபோல், நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானம், கம்பளி, மரம் மற்றும் பழங்கள் (அவகேடோ, புளுபெர்ரி) போன்ற பொருட்களுக்கு இந்தியாவும் வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. இருப்பினும், இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பால் பொருட்கள், வெங்காயம், பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை போன்ற உணர்திறன் மிக்க துறைகளுக்கு வரிவிலக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
The signing of the #IndiaNZFTA marks an important milestone in India-New Zealand bilateral ties.
It will create new opportunities in India across sectors through higher investments, wider market access, and stronger services cooperation.This is truly a landmark step that will… pic.twitter.com/QZTOY2KpjN
— Piyush Goyal (@PiyushGoyal) April 27, 2026
இந்த ஒப்பந்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம் வேலை வாய்ப்பாக உள்ளது. இந்திய பணியாளர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 1,667 விசாக்கள் என்ற அடிப்படையில், மொத்தமாக 5,000 ஊழியர்கள் நியூசிலாந்தில் தங்கிப் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.
தற்போது 1.3 பில்லியன் டாலராக இருக்கும் இருதரப்பு வர்த்தகத்தை, அடுத்த ஐந்தாண்டுகளில் 5 பில்லியன் டாலராக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.

