
சிரிலிய சவிய நிதி முறைகேடு விசாரணை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்க பிறிதொரு தினத்தை முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குவதற்கு மாற்றுத் திகதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஊடாக கடிதம் மூலம் இக்கோரிக்கை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஷிராந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் சென்றுள்ளதால், தற்போதைய சூழலில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக முடியாத நிலை காணப்படுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் நாடு திரும்பியதும் நேரடியாக முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிரிலிய சவிய நிதியத்துடன் தொடர்புடைய வங்கிக் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் நேற்று முன்தினம் (24) முன்னிலையாகுமாறு அவருக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

