Last Updated:
நிதியாண்டின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் 3.43 லட்சம் கோடி ரூபாய் இழப்பு. சென்செக்ஸ் 1390 புள்ளிகள், நிஃப்டி 353 புள்ளிகள் சரிவு. யுபிஐ பரிவர்த்தனை மார்ச் மாதத்தில் புதிய உச்சம்.
நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவால் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது புதன்கிழமை முதல், பதில் வரி விதிக்கப் போவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் வர்த்தகத்தை தொடங்கின.
வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. வர்த்தகத்தின் நிறைவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1390 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 353 புள்ளிகள் சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெரிய சரிவை கண்டன கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதும் இந்திய பங்குச்சந்தைகளின் நிலைமையை சிக்கலாக்கியுள்ளன.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் யுபிஐ பரிவர்த்தனை இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. NPCI வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதம் 24 புள்ளி 77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான யுபிஐ பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த மார்ச் மாதம் ஆயிரத்து 830 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும், இது பிப்ரவரி மாதத்தில் ஆயிரத்து 611 கோடி பரிவர்த்தனைகளாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் யுபிஐ பரிவர்த்தனை சராசரியாக ஒரு நாளைக்கு 79 ஆயிரத்து 910 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெறுவதாகவும் NPCI தெரிவித்துள்ளது.
April 01, 2025 10:27 PM IST


