Last Updated:
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நாளை நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் பூதாகரம் அடைந்து வரும் நிலையில், நாளை நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் தெற்கில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. தீவிரவாத தாக்குதலை கண்டித்து இந்தியாவும், பதிலடி கொடுக்கும் எண்ணத்தில் பாகிஸ்தானும் பரஸ்பரம் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. அமைதி ஒப்பந்தமும், நதி நீர் ஒப்பந்தமும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதிகளில் தொடர் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், எல்லைப் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடுகளை அரங்கேற்றி வருகிறது. இந்த மிரட்டல்களின் அடுத்த கட்டமாக கடந்த 3ஆம் தேதி தரையில் இருந்து 450 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தரையில் உள்ள இலக்கை அழிக்கும் அப்தலி ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்துப் பார்த்தது. தொடர்ந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 120 கிலோ மீட்டர் தூரம் தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஃபத்தா ஏவுகணையையும் பாகிஸ்தான் சோதித்து பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா, ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப் படை தளபதி ஏபி சிங் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது விமானம் மற்றும் கடற்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து தளபதிகள் விளக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங், பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்திய ராணுவத்தின் தயாரிப்பு குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ராணுவ பொறியியல் சேவைகள் மற்றும் மனோஹர் பரிக்கர் பாதுகாப்பு விவகார படிப்புகள் மற்றும் ஆய்வுக்கான நிறுவனம் ஆகியவற்றின் தரவுகளைத் திருட்டுத்தனமாக அறிந்துகொள்ள பாகிஸ்தான் ஹேக்கர்கள் இணையவழியில் ஊடுருவியதாக தகவல் வெளியானது. இருப்பினும், இந்த சைபர் தாக்குதலை மனோஹர் பரிக்கர் ஆய்வு நிறுவனம் மறுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மண்ணில் திட்டம் தீட்டப்பட்டது மட்டுமின்றி, அத்துமீறிய துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தி வரும் நிலையில், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி இந்தியாவை சீண்டி வருகிறது. இந்தியாவும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று கூறி வருகிறது.
இந்நிலையில், நாளை (மே 7ஆம் தேதி) அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொள்ளும்படி மாநில தலைமைச் செயலாளர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அப்போது, வான்வெளி தாக்குதல் முன்னெச்சரிக்கை கருவிகளின் செயல்பாட்டுத் திறனை மதிப்பிடுதல் கட்டுப்பாட்டு அறைகள், நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடுகளை சோதித்து அறிதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
எதிரிகள் தாக்கும்போது பொதுமக்கள், மாணவர்கள் தங்களைப் பாதுகாத்து கொள்ளுதல் மற்றும் திடீர் முழு மின்தடை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாகவும் பயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த பயிற்சி பொது மக்களின் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ஒருவேளை குடியிருப்புப் பகுதிகளில் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அப்போது தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி என்பதையும் பயிற்சியின்போது மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


