Last Updated:
இந்த போட்டி நாளை இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றுள்ள நிலையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனையொட்டி கடந்த சில நாட்களாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்திய அணியைப் பொறுத்த அளவில் முதன்முறையாக சுப்மன் கில் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அணியில் ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் போன்ற ஓரளவு அனுபவமிக்க வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இதேபோன்று சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் போன்ற கடந்த சில மாதங்களாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களும் அணியில் உள்ளார்கள்.
இந்திய அணியில் முக்கிய வீரர்களாக இடம் பெற்று அணிக்கு பல்வேறு தருணங்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கடந்த மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். இதனால் இங்கிலாந்து மண்ணில் இளம் வீரர்களை அதிகமாகக் கொண்டுள்ள இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்கிற ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது.
சொந்த மைதானத்தில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு கூடுதல் பலம் இருக்கும் என கருதப்படுகிறது. இங்கிலாந்து அணியில் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அணியில் பென் டக்கட், ஜோ ரூட், ஒல்லி போப், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், கிறிஸ் வோக்ஸ், ஜெமி ஓவர்டன் போன்ற சிறந்த ஆட்டக்காரர்கள் அணியில் உள்ளார்கள்.
இதனால் நாளை தொடங்கும் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி நாளை இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டிகள் வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம்பெறும் என்பதால் இரு அணிகளும் ஒவ்வொரு மேட்ச்சிலும் மிகுந்த கவனத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
June 19, 2025 9:47 PM IST


