Last Updated:
இஸ்ரேல்-ஈரான் போர்ப்பதற்றம் உச்சத்தில் உள்ளது. ஈரானின் அணு மையங்களை இஸ்ரேல் தாக்கியதற்கு பதிலடி கொடுக்க ஈரான் டெல் அவிவ் மற்றும் அமெரிக்க தூதரகத்தை தாக்கியது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர்ப்பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று ஈரானின் அணு சக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல், சமீபத்திய பதற்றங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ’Operation Rising lion’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ’True promise 3’ என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
அந்த வகையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் தூதரக கட்டடம் லேசாக சேதம் அடைந்தது. ஆனால், ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் குண்டு வீசியதால் பல இடங்கள் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தன.
இதேபோன்று, ஈரானின் குவாம் நகர் அருகே உள்ள போர்டோவ் அணு உலை மீது இஸ்ரேல் குண்டு வீசியதில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். மேலும், ஈரான் ராணுவத்தின் குவாட் படைப்பிரிவின் கட்டுப்பாட்டு மையத்தை தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள ஈரானின் அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பெண் செய்தி வாசிப்பாளர், நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏவுகணை ஒன்று அந்த கட்டடத்தை கடுமையாகத் தாக்கியது. இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது இஸ்ரேலின் இந்த தாக்குதலால் தொலைக்காட்சி நிறுவனத்தின் கட்டடம் தீப்பற்றி எரிந்தது.
தாக்குதல் நடந்தபோதும் ஈரான் தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன. குறிப்பாக, பற்றி எரியும் ஊடக கட்டடம் முன்பாக செய்தியாளர் ஒருவர் நேரலையில் செய்திகளை வழங்கினார். இதனிடையே, இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தி சண்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள ஈரான், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தே தீருவோம் என கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான பதற்றத்திற்கு மத்தியில், ஈரானில் இருந்து இந்திய மாணவர்களை ஆர்மீனியா வழியாக வெளியேற்றும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
June 17, 2025 7:25 AM IST
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பதற்றம்.. ‘போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லை..’ ஈரான் திட்டவட்டம்!


