பிகாரில் நாய் பாபு என்ற பெயரில் ஒரு இருப்பிடச் சான்றிதழ், புகைப்படத்துடன், நாயின் பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட சான்றிதழ் வழஙகப்பட்டுள்ளது பிகாரில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
பிகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த முறை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆதார் அட்டையோ, குடும்ப அட்டையோ, வாக்காளர் உரிமை பெற தகுதியான ஆவணமல்ல, இருப்பிடச் சான்று, பிறப்புச் சான்று உள்ளிட்ட 11 ஆவணங்கள் மட்டுமே தகுதியாக ஏற்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில்தான், தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் 11 ஆவணங்களும் உண்மைத்தன்மைக் கொண்டது அல்ல என்றும், அதனையும் மோசடி செய்து எளிதாகப் பெறமுடியும் என்பதையும் உறுதிப்படுத்தவே, நாய் ஒன்றுக்கு அதன் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆர்டிபிஎஸ் இணையதளத்தில், பாட்னா அருகே உள்ள மசௌரியில், ஒரு நாய்க்கு வழங்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் வைரலாகி வருகிறது.
அந்த சான்றிதழில், தந்தை பெயர் குட்டா பாபு, தாய் குட்டியா தேவி, புகைப்படம் என்ற இடத்தில் நாயின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. வீட்டு முகவரியும் இடம்பெற்றுள்ளது. இந்த சான்றிதழில், வருவாய்த் துறை அதிகாரியின் டிஜிட்டல் கையெழுத்தும் உள்ளது. இந்த இருப்பிடச் சான்றிதழ் உண்மையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 11 ஆவணங்களை அடிப்படையாக வைத்து வாக்குரிமையை உறுதி செய்வதில், அரசின் பின்னடைவும் இவ்வளவு கவனக்குறைவாக ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளின் மீதான கண்டனங்களும் வலுவடைந்துள்ளது. இப்படிப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் பெறப்படும் நிலையில், ஆதார் அட்டையும் குடும்ப அட்டையும் தகுதிச் சான்றிதழ்களாக ஏற்கப்படாதா என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
இந்த நாய் பெற்றிருக்கும் இருப்பிடச் சான்றிதழை, குடியுரிமைக்கான சான்றாக ஏற்று வாக்காளர் அட்டை வழங்கப்படும். ஆனால், குடும்ப அட்டையும் ஆதார் அட்டையும் போலி என்று அரசு நிராகரிக்குமா என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் பதிவில், அந்த நாய் வாக்காளராக வந்து பாஜகவுக்கு வாக்களிக்கும். அவர்கள் நாய் பாபுவை ஒருவேளை வேட்பாளராகக்கூட ஆக்குவார்கள், அது மட்டுமா அனைத்து பாஜக தொண்டர்களும் நாய் பாபுவுக்கு வாக்களிப்பார்கள். இது பாஜக, தேர்தல் முறையை மோசமாகக் கையாள்வதற்கு அப்பட்டமான உதாரணம். இது குற்றவியல் செயலில், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து கும்பலாக செயல்படுகிறது. இந்த குற்றங்களக்கு, நீதிமன்றங்கள் பக்கவாட்டில் நின்று ஜனநாயகத்தின் படுகொலையை தங்கள் மௌனத்தின் மூலம் ஆசிர்வதிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறது.