Last Updated:
கல்லூரிக்கு சென்ற பின்பு நாய்களை கவனித்து கொள்வதற்காக புஷ்பலதா என்ற வேலைக்கார பெண்ணை ராஷி பூஜாரி நியமித்திருந்தார்.
பெங்களூரு நகரில் வளர்ப்பு நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்ற வீட்டு வேலைக்கார பெண் லிப்டில் வைத்து அடித்துக் கொன்ற திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு பாகலூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஷி பூஜாரி. எம்.பி.ஏ. படித்து வரும் இவர், தனது வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஜீகுகூவா என்ற இனத்தை சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வந்தார். கல்லூரிக்கு சென்ற பின்பு நாய்களை கவனித்து கொள்வதற்காக புஷ்பலதா என்ற வேலைக்கார பெண்ணை ராஷி பூஜாரி நியமித்திருந்தார். அந்த நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது, சரியான நேரத்திற்கு சாப்பாடு கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை புஷ்பலதா செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ம் தேதி இரு நாய்களையும் நடைபயிற்சிக்காக தனித்தனி கயிறுகளில் கட்டி புஷ்பலதா அழைத்து சென்றார். சிறிது நேரம் கழித்து புஷ்பலதா வீட்டுக்கு சென்றார். அப்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ஒரு நாய் இறந்து விட்டதாக ராஷி பூஜாரியிடம் புஷ்பலதா கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்து போன ராஷி பூஜாரி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். தான் ஆசை ஆசையாக வளர்த்த நாய் இறந்து விட்டதால் மிகுந்த வேதனையில் இருந்து வந்தார்.
இதனிடையில் தான் அவருக்கு புஷ்பலதா மீது சந்தேகம் எழுந்துள்ளது. அபார்ட்மெண்ட் காவலாளியிடம் சென்று சம்பவத்தன்று தனது நாய் மாடியில் இருந்து விழுந்து இறந்ததை பார்த்தீர்களா? என்று ராஷி பூஜாரி விசாரித்துள்ளார். அப்போது நாய் எதுவும் கீழே விழவில்லை மேடம் என்று காவலாளி தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் மேலும் வலுக்க, குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.
அப்போதுதான் அந்த அதிர்ச்சி காட்சியைப் பார்த்து நிலைகுலைந்து போனார். சம்பவத்தன்று இரண்டு நாய்களையும் கயிறு கட்டி அழைத்துச் சென்ற புஷ்பலதா, லிப்டிற்குள் சென்றுள்ளார். அப்போது, ஒரு குட்டி நாயை துணியை துவைப்பது போல் கயிற்றை சுழற்றி தரையில் அடித்து கொடூரமாக கொலை செய்தார் புஷ்பலதா. பின் நாயின் உடலை கயிற்றுடன் தரதரவென இழுத்துச் செல்வதும் மற்றொரு நாயை அழைத்து செல்லும் காட்சிகளும் அந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அதை பார்த்து ராஷி பூஜாரி அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்த சிசிடிவி காட்சிகளை ராஷிபூஜாரி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வேலைக்காரன பெண்ணின் கொடூரச் செயலை அம்பலப்படுத்தினார். அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது. தகவறிந்த பாகலூர் போலீசார், புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து புஷ்பலதாவை கைது செய்தனர்.
கைதான புஷ்பலதா தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும், அவர் பெங்களூருவில் வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாய் இல்லாத ஜீவனை ஈவு இரக்கமின்றி அடித்துக் கொன்ற புஷ்பலதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Bangalore,Karnataka
November 05, 2025 2:52 PM IST


