திருச்சூர்: கேரளாவுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கும் நானே பாஜகவின் எம்பியாக செயல்படுவேன் என அம்மாநிலத்தின் திருச்சூர் லோக்சபா தொகுதியில் வென்ற மலையாள நடிகர் சுரேஷ் கோபி பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் காலூன்றுவதற்கு ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக போராடித்தான் வருகிறது. தமிழ்நாட்டில் இருந்தாவது சில தேர்தல்களில் பாஜக எம்பிக்கள் டெல்லிக்கு போயிருக்கின்றனர்.
ஆனால் இடதுசாரிகளும் காங்கிரஸும் வலிமையாக இருக்கும் கேரளாவில் இதுவரை பாஜக வெற்றி பெற்றதே இல்லை. இந்த சரித்திரத்தை மாற்றிவிட்டார் நடிகர் சுரேஷ் கோபி. திருச்சூர் லோக்சபா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு இம்முறை வெற்றி பெற்றுவிட்டார் சுரேஷ் கோபி. இதன் மூலம் கேரளாவின் முதல் பாஜக எம்பி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சுரேஷ் கோபி. கேரளாவின் முதல் பாஜக எம்பியான சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாகவே கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் சுரேஷ் கோபி எம்பி நேற்று டெல்லி சென்றார். அதற்கு முன்னதாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சுரேஷ் கோபி.
அப்போது, கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரே பாஜக எம்பி நீங்கள்தானே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, நான் திருச்சூர் எம்பி என்பதால் திருச்சூர் தொகுதிக்கு மட்டுமே செயல்படுவேன் என்பது அர்த்தம் அல்ல.நான் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்குமான பாஜக எம்பியாக செயல்படுவேன். தமிழ்நாட்டுக்கான விவகாரங்களை கவனிக்கக் கூடிய எம்பியாகவும் இருப்பேன். இதனை லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போதே தெரிவித்தேன். இதனை ஏற்றுதான் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர்.
ஆகையால் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமான எம்பியாக செயல்படுவேன் என்றார்.தமிழ்நாட்டில் பாஜக தனிக் கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட தமிழ்நாட்டில் பாஜக வெல்லவில்லை. தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர். ஆனாலும் பாஜகவின் தமிழ்நாட்டு எம்பியும் நானே என நடிகர் சுரேஷ் கோபி இருப்பது இப்போது சர்ச்சையாகிவிட்டது.


