Last Updated:
தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை ரவி சாஸ்திரி கூறிய வார்த்தைகளால் முடிந்ததாக தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார்.
அடுத்த போட்டிக்கு வராதே என கூறி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முற்றுப்புள்ளி வைத்ததாக தினேஷ் கார்த்திக் புதிய தகவலை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக தேர்வு செய்யப்பட்டார்.
அந்த தொடரில், 2 போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக், மொத்தமாக 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது முழுமையாக கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரவி சாஸ்திரி, நாசர் உசேன், மைக்கேல் ஆர்தர்டனுடன் தினேஷ் கார்த்திக் PODCAST ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய தினேஷ் கார்த்திக், தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து மனம் திறந்தார்.
ஓய்வு குறித்து நகைச்சுவையாக பேசிய தினேஷ் கார்த்திக், லார்ட்ஸ் மைதானத்தில் நாசர் உசேன் விளையாடிய பிறகு அவராக சென்று பயிற்சியாளரிடம் ஓய்வு பெறுவதாக அறிவித்ததார். ஆனால் அதே லார்ட்ஸ் மைதானத்தில் நான் விளையாடிய பிறகு, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே வந்து “அடுத்து டெஸ்ட்டுக்கு வருவது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது” என கூறியதாக நினைவுகூர்ந்தார்.
தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்ற பிறகு தான் தற்போது அதிரடியாக விளையாடி வரும் இந்தியாவின் துணை கேப்டனான ரிஷப் பந்த் அணிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
July 08, 2025 11:46 AM IST