Last Updated:
அவரது விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் கடினம். அவருடைய பேட்டிங் ஸ்டைல் எங்களுக்கு மிகுந்த வேதனையை கொடுக்கும். தேவைப்பட்டால் எந்தவித அவசரமும் இன்றி தொடர்ந்து 100 பந்துகளை சந்திக்கவும் அவர் தயங்கமாட்டார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் (Pat Cummins), தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் தான் எதிர்கொண்ட மிகக் கடினமான இந்திய பேட்ஸ்மேன் செதேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) என்று தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரங்களான விராட் கோலி அல்லது ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்யாமல், புஜாராவைத் தேர்வு செய்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பிரைம் வீடியோ ஸ்போர்ட் (Prime Video Sport) வெளியிட்ட சிறப்பு நேர்காணல் ஒன்றில், தான் எதிர்கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகவும் சவாலான எதிரணி வீரர்களை கம்மின்ஸ் பட்டியலிட்டார். அதில் இந்திய அணியைப் பற்றிப் பேசுகையில் புஜாராவின் பெயரைக் குறிப்பிட்ட அவர், புஜாராவின் விக்கெட்டை வீழ்த்துவது எவ்வளவு கடினமானது என்பதை விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில், “இந்திய அணியில் நான் புஜாராவையே தேர்வு செய்வேன். அவரது விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் கடினம். அவருடைய பேட்டிங் ஸ்டைல் எங்களுக்கு மிகுந்த வேதனையை கொடுக்கும். தேவைப்பட்டால் எந்தவித அவசரமும் இன்றி தொடர்ந்து 100 பந்துகளை சந்திக்கவும் அவர் தயங்கமாட்டார். பந்துவீச்சாளர்களுக்கு அவர் எளிதில் எந்தவொரு வாய்ப்பையும் தரமாட்டார்” என்று புஜாராவின் பொறுமையையும், களத்தில் நிலைத்து நின்று ஆடும் ஆற்றலையும் பாராட்டியுள்ளார்.
இதே நேர்காணலில், பிற நாடுகளைச் சேர்ந்த தனக்கு சவாலாக இருந்த முன்னணி வீரர்களையும் கம்மின்ஸ் குறிப்பிட்டார். முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல். (தான் களமிறங்கிய முதல் பந்திலேயே அஜ்மலின் சுழலில் போல்டான தருணத்தை கம்மின்ஸ் நினைவு கூர்ந்தார்).
இங்கிலாந்து அணியின் அலஸ்டர் குக்,தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், நியூசிலாந்து அணியின் பிரெண்டன் மெக்கல்லம், இலங்கையின் திலகரத்ன தில்ஷான், மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் ஆகியோர் தனக்கு சவாலாக இருந்த பேட்ஸ்மேன்கள் என்றும் கம்மின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் தூணாக விளங்கிய செதேஷ்வர் புஜாரா, 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள் மற்றும் 35 அரைசதங்களுடன் 7,195 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 43.60 ஆகும். மேலும், அவர் இந்தியாவுக்காக 5 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
தற்போது ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த டெஸ்ட் தொடரில் பேட் கம்மின்ஸ் அணியை வழிநடத்தவுள்ளார்.


