Last Updated:
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 2008 குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் இன்று (ஜூலை 31) மும்பை சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று இரவு பிக்கு சௌக் பகுதியில் உள்ள மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், ராஜா ரஹீர்கர், சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் 323 அரசு தரப்பு சாட்சிகள், 8 பாதுகாப்புத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் படை, இந்த வழக்கை முதலில் விசாரித்தது. பின்னர் தேசிய புலனாய்வு முகாமை இவ்வழக்கை விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.
17 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி விசாரணை நடத்தி தீர்ப்பு வெளியிட உள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
July 31, 2025 8:31 AM IST