Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் 9 ஆயிரம் குதிரை சக்தி கொண்ட ரயில் இன்ஜினை தொடங்கி வைத்தார். மேலும் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நாட்டின் முதலாவது 9 ஆயிரம் குதிரை சக்தி திறன் கொண்ட ரயில் இன்ஜினை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தஹோத் என்ற இடத்தில் ரயில்வேவுக்கு சொந்தமான, ரயில் இன்ஜின் உற்பத்தி ஆலையை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், 9 ஆயிரம் குதிரை சக்தி திறன் கொண்ட ரயில் என்ஜின், வந்தே பாரத், விரைவு ரயில் சேவைகள் உள்ளிட்டவற்றை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மே 26, இதே நாள் 2014ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக நான் முதன்முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். முதலில் குஜராத் மக்கள் என்னை ஆசீர்வதித்தார்கள். அதன்பின்னர் நாட்டின் கோடான கோடி மக்கள் என்னை ஆசீர்வதித்தார்கள்” எனத் தெரிவித்தார். முன்னதாக, வதோதராவில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பொதுமக்களும், பாஜக பிரமுகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையில் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகள் குறித்து விவரித்த கலோனல் சோஃபியா குரேஷியின் குடும்பத்தினரும் பங்கேற்று, பிரதமர் மோடி மீது மலர் தூவினர்.


