நாட்டிலேயே அதிக ஊழல் நடப்பது வங்கிகளில் தான்? – ஊழல் தடுப்பு குழு அதிர்ச்சி ரிப்போர்ட்..!!
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2025ஆம் ஆண்டில் பதிவான ஊழல் புகார்கள் தொடர்பான விவரங்களை மத்திய ஊழல் தடுப்பு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டு அரசாங்க அமைப்புகளுக்கு எதிராக மொத்தம் 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் வந்துள்ளன.
CVC அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, பெறப்பட்ட 70,500 ஊழல் புகார்களில் 64,905 புகார்கள் வெற்றிகரமாக விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 5,679 புகார்கள் விசாரணையில் உள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக வங்கிகளுக்கு எதிராக 9,933 ஊழல் புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 9,520 புகார்கள் முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 413 புகார்கள் நிலுவையில் உள்ளன; இதில் 52 புகார்கள் மூன்று மாதங்களை கடந்து நிலுவையில் உள்ளன.

வங்கிகளுக்கு அடுத்ததாக இந்திய ரயில்வே 9,381 புகார்களை பெற்று இரண்டாம் இடத்திலுள்ளது. இதில் 8,754 புகார்கள் முடிக்கப்பட்டன. 627 புகார்கள் நிலுவையில் உள்ளன. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையில் 6,531 ஊழல் புகார்கள் பதிவாகியுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக 4,834 புகார்களும் வந்துள்ளன.
நிதித் துறை மீது 3,107 புகார்கள், டெல்லி அரசு மீது 2,804 புகார்கள், பெட்ரோலிய அமைச்சகம் மீது 2,722 புகார்கள் பதிவாகியுள்ளன. பணிகளை முடிக்க லஞ்சம் அல்லது பரிசு பெறுவது, அதிகார்கள் சொந்த லாப நோக்கில் செயல்படுவது போன்ற அனைத்துமே இந்த புகார்களில் அடங்கும்.
இந்தியாவிலேயே அதிகளவில் சாமானிய மக்கள் சேவை பெறும் துறை தான் வங்கி துறை. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் வங்கி கணக்கு தொடங்குவது, கடன் பெறுவது , அரசின் நேரடி மானிய திட்டத்தில் மானிய தொகை பெறுவது உள்ளிட்ட பல சேவைகளை பெறுவதற்கும் வங்கிகளையே நாடுகின்றனர். சுய தொழில் தொடங்க கடன் பெறுவது தொடங்கி பெரிய தொழில்களுக்கான கடன்கள் வரை வழங்கப்படுகின்றன.
இப்படி சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வங்கி துறை தான் ஊழல் புகாரில் முதலிடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஊழல் தடுப்பு ஆணைக்குழு ஊழல் மற்றும் லஞ்ச புகார்கள் மீது நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருப்பதாகவும் 3 மாதங்களில் புகார்களுக்கு தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

