Last Updated:
உச்சநீதிமன்றம், இமாச்சல பிரதேசம் நாட்டின் வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் என எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியம் என மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், நாட்டின் வரைபடத்தில் இருந்து இமாச்சல பிரதேசம் காணாமல் போகும் எனறும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தின் பசுமை பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் உணவு விடுதி கட்ட அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், பர்திவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குலு மணாலியில் அண்மையில் ஏற்பட்ட மேகவெடிப்பை சுட்டிக்காட்டி, முறைப்படுத்தாத வளர்ச்சி தொடர்ந்தால் நாட்டின் வரைப்படத்திலிருந்து இமாச்சல பிரதேசம் காணாமல் போகும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இது நடக்காமல் இருக்க கடவுள் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
வருவாய் பெருக்கத்துக்காக சுற்றுச்சூழலை பலி கொடுக்க வேண்டாம் எனவும் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலை பலி கொடுத்து வருவாய் ஈட்டக் கூடாது எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினர்.
மொத்த நிலப்பரப்பில் 66 விழுக்காட்டிற்கு அதிகமாக காடுகள் சூழ்ந்துள்ளதால், இமாச்சல பிரதேசம் அழகு மற்றும் பசுமைக்கு பெயர் பெற்ற நிலையில், மனித பேராசை மற்றும் அக்கறையின்மை காரணமாக இயற்கை வளத்திற்கு ஆபத்து வந்துள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நான்கு வாரங்களில் மனு தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
August 02, 2025 6:26 PM IST


