Last Updated:
மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த சிறப்பு ரயில் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் துரிதப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்-புஜ் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் அடுத்தக்கட்டமாக, டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 82 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் நாட்டின் முதல் மண்டல அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
டெல்லியின் சராய் கலே கான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 82 கிலோ மீட்டர் தூரத்தில் மீரட்டில் உள்ள மோடிபுரம் ரயில் நிலையத்தை இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம் 55 நிமிடங்களில் சென்றடைலாம். அதாவது நமோ பாரத் விரைவு ரயிலால் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். தற்போது, முதற்கட்டமாக நமோ பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.
3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 700 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏசி, மெத்தை போன்ற இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளும் நமோ பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் நமோ ரயில் பயணிக்கும். மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.
இதன் மற்றொரு சிறப்பம்சம் மீரட் மெட்ரோ நிறுவனம், தனது தண்டவாளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை நமோ பாரத் ரயிலுடன் பகிர்ந்துக் கொள்கிறது. இதன் மூலம் மெட்ரோவில் பயணிப்பவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறாமல் அதே ரயில் நிலையத்தில் நமோ பாரத் ரயிலில் ஏற முடியும். இந்த ரயிலில் டிக்கெட் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 210 ரூபாய் வரை தூரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. மேலும், பெரும்பாலானோர் பணிக்கு செல்லக்கூடிய பீக் ஹவர்ஸில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளன.
இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட அதிவேக நமோ பாரத் ரயில் நாடு முழுவதும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான மீரட் மெட்ரோவையும் பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் தான் மெட்ரோ கட்டமைப்பில் அதிவேக கொண்ட ரயிலாகும்.


