Last Updated:
மும்பை மாநகராட்சித் தேர்தலில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, பாஜக, தேவேந்திர பட்னாவிஸ், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் வாக்களித்தனர். முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது.
நாடே எதிர்பார்க்கும் மும்பை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.
மராட்டியத்தில் சிவசேனாவை நிறுவிய பால்தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரேவும், சிவ சேனாவில் இருந்து வெளியேறிய ராஜ் தாக்கரேவும் தனித்தனியாக தேர்தலில் களம் கண்டு வந்தததால் பாஜக அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக அணியே வென்றது.
இதனால் பாஜகவை தோற்கடிக்கவும், 26 ஆண்டுகளாக தங்கள் வசமிருந்த பெருமைமிக்க மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்காகவும், நகராட்சித் தேர்தலில் ஒன்றுவிட்ட தாக்கரே சகோதரர்கள் கைகோர்த்துள்ளனர். இதனால் மும்பை மாநகராட்சித் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையுடன் சேர்த்து.புனே, தானே, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது.
மும்பையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூரில் தனது மனைவி அம்ருதா மற்றும் தாயுடன் சென்று ஜனநாயக கடமை ஆற்றினார். மும்பையில் உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்ய தாக்கரே தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதேபோல, ராஜ் தாக்கரே தனது குடும்பத்துடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார்.
சச்சின் டெண்டுல்கர், சல்மான் கான், ஆமிர் கான், அக்சய் குமார், நடிகைகள் கரீனா கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் ஜனநாயக கடமையாற்றினர். பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கருத்துக் கணிப்பில் மும்பையில் பாஜக அணியே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.


