Last Updated:
மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து, 10 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிற் சங்கங்கள் இன்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலம் போராடிப்பெற்ற தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். முறைசார தொழிலாளர்களுக்கான வாரியம் அமைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்ககூடாது.
வேலைவாய்ப்புகளை அதிகரித்து, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில் வங்கி, காப்பீடு, தபால், நெடுஞ்சாலை, கட்டுமானம், போக்குவரத்து துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுகவின் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழந்துள்ளது. இந்த நிலையில் முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது நேற்று பணிக்கு வந்த ஊழியர்களைக் கொண்டு இன்றும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அவர்கள் நாளை ஓய்வு எடுக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ள பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு செல்வார்கள் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், போராட்டத்துக்கு முழு ஆதரவு தருவதாக சிஐடியூ தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் ஒரு நாள் ஊதியம் வழங்கப்படாது எனவும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
July 09, 2025 6:39 AM IST


