இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இலங்கையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற அனுர குமார திசநாயக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார்.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வெற்றி பெற்றார். அவர் கடந்த திங்களன்று பதவியேற்றார். புதிய அதிபர் தலைமையில், புதிய அரசு பொறுப்பேற்க வசதியாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அறிக்கையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைமையிலான ஆட்சியை அமைக்க விரும்புவதாக அதிபர் தெரிவித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில் அதிபர் கையொப்பமிட்டார்.
இலங்கையில் கடைசியாக 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவு இன்னும் 11 மாதங்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
Also Read |
இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர்… யார் இந்த ஹரிணி அமரசூரியா?
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், கடந்த தேர்தலில் அதிபர் அனுரகுமார திசநாயக்கவின் கட்சி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனிடையே இடைக்கால அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றது. இடைக்கால பிரதமராக டாக்டர் ஹரிணி அமரசூர்யா பொறுப்பேற்றார். இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.
அதிபர் பாதுகாப்பு, நிதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளையும், பிரதமர் நீதி, கல்வி, தொழிலாளர், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட துறைகளையும் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
