Last Updated:
பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் பேசியது முழுக்க முழுக்க அரசியல் பேச்சு. நாளை டெல்லி மக்கள் வாக்கு செலுத்த இருக்கின்றனர். இன்று பிரதமர் பிரச்சாரம் செய்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். கும்பமேளா கூட்ட நெரிசல், எல்லையில் சீனா அத்துமீறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி இன்று மாலை பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் பாஜக ஆட்சிக் காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும், எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனத்தையும் முன்வைத்துப் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஆசிரியர் கார்த்திகைச்செல்வன், ‘நாடாளுமன்றத்தில் மோடி Vs ராகுல் அக்கறை காட்டியது யார்? அரசியல் பேசியது யார்?’ என சொல்லதிகாரம் நிகழ்ச்சியை நடத்தினார்.
அதில் பங்கேற்றுப் பேசிய பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன், “பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் பேசியது முழுக்க முழுக்க அரசியல் பேச்சு. நேற்றைய முன் தினம் டெல்லி பிரச்சாரத்திற்கான நேரம் முடியும்போது ராகுல் காந்தி தனது உரையை நாடாளுமன்றத்தில் முடிக்கிறார். இன்று பிரதமர் பிரச்சாரம் செய்கிறார்.
ஒவ்வொரு தேர்தலிலும் அவர் சைலண்ட் ஹவரில் இதனைச் செய்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அக்ஷய் குமாருடன் நேர்காணல் வந்தது. தற்போது நாளை டெல்லி மக்கள் வாக்கு செலுத்த இருக்கின்றனர். இன்று பிரதமர் நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க் கட்சியின் மீதும் பொதுவாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
பிரதமர், பொது விநியோகத் திட்டம் குறித்துப் பேசுகிறார். சிறந்த உதாரணம் புதுச்சேரிதான். புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் பொருள்களுக்குப் பதிலாக பணம் கொடுக்கிறார்கள். ஆனால், அந்தப் பணத்தை வைத்துத் தேவையான பொருளை வாங்கமுடியாது என்ற நிலை இருக்கிறது.
முத்தலாக் பற்றி அதிகம் பேசுகிறார்கள். நாடு முழுக்க பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் இருந்தாலும், ஐதராபாத்தில் தான் நகரத்தில் அதிகப்படியான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அங்கிருக்கும் பெண்கள், முத்தலாக் முன்பு தலாக் கொடுத்துவிட்டு கணவர்கள் சென்றுவிடுவார்கள். தற்போது தலாக் கொடுக்காமல் விட்டுச்செல்லும் நிலைதான் இருக்கிறது என்கிறார்கள். காரணம், தலாக் கொடுத்தால் வழக்குப் பதிவு செய்யப்படும். எனவே தலாக் கொடுக்காமல் மனைவிகளை விட்டுச் செல்கின்றனர்.
25 கோடி மக்களை வறுமைக் கோட்டில் இருந்து மீட்டுவிட்டோம் என்கிறார். அது உண்மையாக இருந்தால் நிச்சயமாக வரவேற்கிறேன். ஆனால், நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாருங்கள். அனைத்து விலைவாசியும் உயர்ந்துள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பால் லாபத்தை அடைந்திருக்கிறோம் என்கிறார் மோடி. ஆனால், பெட்ரோல் விலை குறையவில்லை.
சீனா ஊடுறுவலில் அவர்கள் கணக்குப்படி 70 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் 30,000 சதுர அடியைக் கொடுத்தது. நாங்கள் 11 வருடம் தான் இருக்கிறோம். அதில் 4,000 சதுர அடிதான் சீனாவுக்குக் கொடுத்திருக்கிறோம் என்றபடிதான் வாதம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
February 04, 2025 10:17 PM IST
நாடாளுமன்றத்தில் டெல்லி தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் – பத்திரிகையாளர் Dr. ஆர்.கே. ராதாகிருஷ்ணன்