Last Updated:
ஏன் மத்திய அரசு எஸ்.ஐ.ஆர். குறித்தான விவாதத்தை நாடாளுமன்றத்தில் ஏற்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் நடந்துவருகிறது. இந்த விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. ஆனால், நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்” எனத் தெரிவித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது; “எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. ஆனால், நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எஸ்.ஐ.ஆர். என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. இந்தியத் தேர்தல் ஆணையமும், ஆணையரும் அரசின் கீழ் பணியாற்றுபவர்கள் கிடையாது. ஒருவேளை நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதில் அளிப்பது? ஆனால், எதிர்க்கட்சிகள் தேர்தல் சீர்திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என கூறியதும் அதனை நாங்கள், உடனடியாக ஏற்றுக்கொண்டோம்.
முதல் இரண்டு நாள் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கூறி நாடாளுமன்றம் முடங்கியது. நாங்கள் இதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்பது போல், மக்களுக்கு தவறான செய்தி அனுப்பப்பட்டது. இந்த நாட்டில் விவாதங்களுக்கு நாடாளுமன்றம் மிகப்பெரிய அரங்கம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாஜக-தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபோதும் விவாதங்களிலிருந்து விலகிச் செல்வதில்லை.
எந்த விவகாரமாக இருந்தாலும், நாடாளுமன்ற விதியின்படி விவாதிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். நான்கு மாதங்களாக, எஸ்.ஐ.ஆரைப் பற்றி ஒருதலைப்பட்சமான பொய்கள் பரப்பப்பட்டன. நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒரு நாட்டில், ஊடுருவல்காரர்கள் பிரதமரையும், முதலமைச்சரையும் தேர்வு செய்தால் அந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்குமா? வாக்காளர் பட்டியலை மறுசீரமைப்பு செய்வதே எஸ்.ஐ.ஆர்.-ன் பணி. இது சில அரசியல் கட்சிகளின் அரசியல் லட்சியத்தை காயப்படுத்தும் என நான் நம்புகிறேன். அந்தக் கட்சிகளுக்கு இந்நாட்டின் வாக்காளர்கள் வாக்களிப்பதில்லை. மாறாக ஒரு சில ஊடுருவல்காரர்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள், இப்போது அவர்களும் போய்விட்டார்கள். இதனால், அந்தக் கட்சிகள் மீது எனக்கு அனுதாபம் இருக்கிறது.
நவம்பர் 5ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹைட்ரஜன் பாம் போடுவதாக சொல்லி செய்தியாளர் சந்திப்பில், ஹரியானா மாநிலத்தில் ஒரே வீட்டில் இருந்து 501 பேர் வாக்களித்தனர் எனத் தெரிவித்தார். ஆனால், தேர்தல் ஆணையம் வீடும், வாக்காளர்களும் போலி அல்ல என அனைத்தையும் தெளிவு செய்துவிட்டது” என பேசியுள்ளார்.
December 10, 2025 6:20 PM IST
“நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க முடியாது” – எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா பதில்

