இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக எம்.பி.க்களை “நாகரிகமற்றவர்கள்” என்று கூறினார். இதற்கு திமுக உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது சொற்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
மத்திய அமைச்சரின் சொல் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்றே கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் அவரது உருவபொம்மையை கொளுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2024-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா: “தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!”
2025-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: “தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!”
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.
“இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் NEP-யை எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போராட்டத்தைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும்” எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : தண்ணீர், காய்கறி மட்டுமே உணவு.. 6 மாதங்களாக டயட் இருந்த இளம்பெண்.. இறுதியில் நிகழ்ந்த சோகம்!
இப்படியான சூழலில் இன்று மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சரும், மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவராஜ் சிங் சௌஹான், “நாங்கள் தமிழகத்தின் மகத்தான மக்களை வணங்குகிறோம், தமிழ் கலாச்சாரத்தை வணங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
சிவராஜ் சிங் சௌஹான் தனது எக்ஸ் பக்கத்தில், மாநிலங்களவையில் தான் பேசிய காணொளியை பகிர்ந்து அத்துடன் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், “நான் இரண்டு முறை தமிழகத்திற்கு வந்தபோது நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் கலந்துகொள்ளவில்லை.
தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் பயன்பெற நீங்கள் என்னை அழைத்தால் நான் தமிழகத்திற்கு மீண்டும் வருகிறேன். நாங்கள் தமிழகத்தின் மகத்தான மக்களை வணங்குகிறோம், தமிழ் கலாச்சாரத்தை வணங்குகிறோம், தமிழ் மொழியை வணங்குகிறோம். நாம் அனைவரும் பாரத அன்னையின் பிள்ளைகள், நமக்குள் பாகுபாட்டிற்கான இடமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
March 11, 2025 7:25 PM IST