இரவு நேரங்களில் திடீரென மொபைல் போனுக்கு வரும் பணப் பரிமாற்றச் செய்தி (Debit Alert) எவரையும் பதற்றமடையச் செய்யும். வங்கி கிளைகள் மூடப்பட்டிருக்கும் நள்ளிரவு நேரத்தில், விடியும் வரை காத்திருப்பது உங்கள் மொத்த சேமிப்பையும் பெரும் ஆபத்தில் கொண்டுபோய்விடும். எனவே, இத்தகைய சைபர் மோசடிகள் அல்லது முறையற்ற பணப் பரிமாற்றங்கள் இரவு நேரத்தில் நிகழும் போது, உடனடியாகப் பின்பற்றி உங்கள் பணத்தைப் பாதுகாக்க வேண்டியவை குறித்து பார்க்கலாம். காலை வரை எதற்காகவும் காத்திருக்க வேண்டாம். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழிகாட்டுதல்களின்படி, அனைத்து வங்கிகளும் சட்டவிரோத மின்னணுப் பரிமாற்றங்களைப் புகாரளிக்க 24 மணி நேரமும் செயல்படும் அவசர உதவி எண்களை வழங்க வேண்டும். உங்கள் டெபிட் கார்டு, வங்கி ஆப் அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள வங்கியின் உதவி எண்ணைத் தொடர்புகொண்டு மோசடியைப் புகாரளியுங்கள். மேலும், புகாரின் குறிப்பு எண்ணை (Complaint Reference Number) தவறாமல் குறித்துக் கொள்ளவும்.

