மத்தியப் பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உணவு நச்சுத்தன்மை காரணமாக 200 கிளிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்வா பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அமைந்துள்ள நீர்வழிப் பாலம் அருகே, இறந்து கிடந்த கிளிகள் கண்டெடுக்கப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளின்போது சில கிளிகள் உயிருடன் இருந்தன. ஆனால், அவை உட்கொண்ட உணவின் நச்சுத்தன்மை மிகவும் வீரியமிக்கதாக இருந்ததால், சிறிது நேரத்திலேயே அவையும் உயிரிழந்துவிட்டன என்று மாவட்ட வனவிலங்கு காப்பாளர் டோனி சர்மா தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த நீர்வழிப் பாலத்தின் அருகே கிளிகளுக்கு உணவளிப்பதை வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் கண்காணிப்புப் பணிக்காக ஊழியர்களையும் நியமித்துள்ளனர். உயிரிழந்த பறவைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், பரிசோதனைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுதொடர்பாகக் கால்நடைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “கிளிகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர் மனிஷா சவுகான், கிளிகளின் உடலில் நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார். மக்கள் பெரும்பாலும் அறியாமலேயே பறவைகளுக்கு முறையற்ற உணவுகளை அளிக்கிறார்கள். இது அவற்றின் செரிமான மண்டலத்திற்கு ஆபத்தானது,” என்று குறிப்பிட்டார்.
கால்நடை விரிவாக்க அதிகாரி டாக்டர் சுரேஷ் பாகேல் கூறுகையில், “இறந்த பறவைகளின் வயிற்றில் அரிசி, சிறிய கூழாங்கற்கள் காணப்பட்டன. முறையற்ற உணவே இறப்பிற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வயல்களில் இரை தேடியதோ அல்லது நர்மதா நதியிலிருந்து வரும் அசுத்தமான நீரோகூட இதற்குக் காரணமாக இருக்கலாம்,” என்றார்.
பாலத்திற்கு வருபவர்கள் சமைத்த உணவு அல்லது மீதமுள்ள உணவைப் பறவைகளுக்கு வழங்குவதாலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
The post நர்மதா நதிக்கரையில் சோகம்: கிளிகள் கொத்துக் கொத்தாக உயிரிழப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

