Last Updated:
மத்தியபிரதேசம் நர்சிங்பூரில், நர்சிங் மாணவி சந்தியா சவுத்ரியை அவரது காதலன் அபிஷேக் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியபிரதேசத்தில், மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த நர்சிங் மாணவியை அவரது காதலன் கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் மருத்துவ ஊழியர்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
நர்சிங் மாணவியை அவரது காதலன் கழுத்தறுத்து கொலை செய்யும் கொடூரக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவமனையில் சந்தியா சவுத்ரி என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வந்தார்.
கடந்த திங்கள் கிழமை மாணவி அவசர சிகிச்சை பிரிவில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் கத்தியுடன் இளைஞர் ஒருவர் நுழைந்து, நர்சிங் மாணவியை ஓரமாக அழைத்துச் சென்று தகராறு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்களது வாக்குவாதம் முற்றவே மருத்துவமனைக்குள் வைத்தே மாணவியைத் தாக்கியிருக்கிறார்.
அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த போதும் யாருமே மாணவியை காப்பாற்ற முன் வரவில்லை. இதனால் இளைஞரின் ஆவேசம் வெறியாக மாறியிருக்கிறது. தன்னைத் தடுக்க யாரும் இல்லை என்கிற தைரியத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த நர்சிங் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.
பட்டப்பகலில் பலர் முன்னிலையில் அரங்கேறிய இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவர் தனது செல்போனில் அந்த காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்கிடையே மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இதனால் அவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு விசாரணையைத் தொடங்கினர். இதில் மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது. இவரும், மாணவியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
சமீபத்தில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் அபிஷேக் தனது காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அபிஷேக்கை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் பலர் முன்னிலையில் அரங்கேறிய இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
July 02, 2025 2:05 PM IST
நர்சிங் மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த காதலன்..! பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் கொடூரம்