[ad_1]
பிகாரில் 2 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன் முடிவில் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பேர் நீக்கம் பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா கூட்டணி, தகுதியுள்ள வாக்காளர்களையும், பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியதாக குற்றம்சாட்டியது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, வாக்காளர் உரிமை என்ற பெயரில் கடந்த 17 ஆம் தேதி முதல் பிகாரில் பேரணி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், பிகாரின் தர்பங்கா பகுதியில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதனையடுத்து தர்பங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நான் இங்கு வரும் வழியில், 6 வயது சிறுவர்கள் என்னைப் பார்த்து ‘நரேந்திர மோடி வாக்கை திருடிவிட்டார்’ என்று சொன்னார்கள். இந்தியாவில் வாக்குகள் திருடப்படுவதை 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புரிந்துகொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, பாஜக அடுத்த 40 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என்று அமித் ஷா கூறினார். அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் அமித் ஷாவுக்கு அடுத்த 40 ஆண்டுகளுக்கான எதிர்காலம் தெரியும். வாக்குத் திருட்டுதான் அதற்கு காரணம்.
2014க்கு முன்பு குஜராத்தில் வாக்குத் திருட்டு துவங்கியது. பின்னர் 2014ஆம் ஆண்டு அதனை தேசிய அளவில் கொண்டுவந்தனர். குஜராத் மாடல் என்பது பொருளாதார மாடல் கிடையாது. அது வாக்குத் திருட்டு மாடல்.
மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அவர்கள் தேர்தலை திருடிவிட்டனர். நம்மிடம் ஆதாரம் இல்லாததால் அப்போது ஏதும் சொல்லவில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் அவர்கள் அதனை மிகவும் அதிகமாக செய்தனர். அதன் மூலம் நமக்கு ஆதாரம் கிடைத்தது.
உதாரணத்திற்கு மகாராஷ்டிராவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்பு தேர்தல் ஆணையம் அங்கு ஒரு கோடி வாக்காளர்களைச் சேர்த்துள்ளது. அவர்கள் அனைவரும் பாஜக வாக்காளர்கள். ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் எப்படி திருடப்பட்டது என நம்மால் ஆதாரத்தை காட்ட முடியும்.
நரேந்திர மோடி வாக்குகளைத் திருடி தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்பதை நான் முழு உத்தரவாதத்துடன் சொல்வேன். மேலும், தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவுக்கு உதவுகிறது.
2023ல் தவறுகள் நடந்துவருகிறது என்பதை நாம் உணரத் துவங்கியபோது, தேர்தல் ஆணையருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்கள். தேர்தல் ஆணையர் நேர்மையாக நடந்துகொண்டால் இப்படியான சட்டத்தை கொண்டு வர என்ன தேவை இருக்கிறது?
நரேந்திர மோடி வாக்குகளைத் திருடுவதற்கு தேர்தல் ஆணையம் உதவி செய்கிறது. வாக்குத் திருட்டு என்பது, தலித், ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் இந்தியாவின் ஏழை எளிய மக்களுக்கு எதிரான தாக்குதல். வாக்குகள் பறிபோன பிறகு ரேஷன் கார்டும், நிலமும் பறிபோகும். இதன் மூலம், அவமதிப்பு, வாய்ப்பு மறுப்பு, கல்வி மறுப்பு என சுதந்திரத்திற்கு முந்தைய காலம் திரும்பும்” எனப் பேசினார்.
August 27, 2025 4:08 PM IST
”நரேந்திர மோடி வாக்குகளைத் திருடுவதற்கு தேர்தல் ஆணையம் உதவி செய்கிறது” – பிகாரில் ராகுல் காந்தி பேச்சு