விராட் கோலி தனது கடைசி ஆஸ்திரேலியப் பயணத்தில் ஆடி வருகிறார். ஆஸ்திரேலியர்களின் குணாதிசயம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் விராட் கோலி.
நேற்று பெர்த் பவுன்ஸி பிட்சில் முதல் ஒருநாள் போட்டியில் மழை இடையூறு காரணமாக இந்திய அணி சோபிக்க முடியாமல் தோற்றது. இதில் விராட் கோலி ஆஸ்திரேலிய பவுன்ஸ் பிட்சில் எப்படி ஆடக்கூடாதோ அப்படி ஆடி அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதாவது முன்னங்காலை முன்னால் நீட்டி ஆஃப் ஸ்டம்ப் பந்தை ட்ரைவ் ஆடினால் இந்தியப் பிட்ச்களில் பந்து கவர் திசையில் செல்லும் அல்லது மிட் ஆஃபில் செல்லும். ஆனால் ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் அதிகமிருப்பதால் அங்கு இந்த ஷாட்டை ஆட முடியாது, பந்தை முழுக்க வரவிட்டுத்தான் ஆட வேண்டும், ஆனால் நேற்று கோலி இந்த கிளாசிக் தவறைச் செய்து ஆட்டமிழந்தார்.
இருந்தாலும் ஆஸ்திரேலிய வீரர்கள், ரசிகர்கள் அந்தச் சூழல் ஆகியவற்றை நன்றாகப் புரிந்து கொண்டுள்ள விராட் கோலி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸிற்கு அளித்துள்ள பேட்டியில் ஆஸ்திரேலிய பிட்ச், ரசிகர்கள், அணி வீரர்கள் உள்ளிட்ட சூழ்நிலைகள் எப்படி தன்னை ஒரு கடினமான வீரனாக உருவாக்கியுள்ளது என்பதைப் பற்றி பேசியுள்ளார்.
“ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவது என்பது உண்மையில் பிடித்தமானது. இங்கு என் கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியுடன் ஆடியிருக்கிறேன். எத்தனை கடினமான போட்டிகள், இத்தனையாண்டுகளாக ஆடியுள்ளோம். இத்தனையாண்டு கால கிரிக்கெட்டை இங்கு வந்து ஆடியதில் நான் கற்றுக் கொண்டது என்னவெனில் நாம் நம் கிரிக்கெட்டை சவாலாக ஆடினால் போட்டித்திறனைக் காட்டினால், அவர்களை முகத்திற்கு முகம் எதிர்கொண்டாலும் நம் மீது மரியாதை இங்கு கூடும் என்பதையே. இந்தநாட்டில் வந்து ஆடுவதில் நான் பெற்ற அனுபவம் இதுவே.
சிறுபிராயத்தில் ஆஸ்திரேலிய சம்மர் என்றால் இந்தியாவில் நாங்கள் அதிகாலையில் எழுந்து டெஸ்ட் போட்டிகளைப் பார்க்கத் தயாராகி விடுவோம். பிட்சில் பந்துகள் எகிறும். அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன், ஓ! இந்த நாட்டில் இந்த பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைமைகளை நாம் கையாளப்பழகிக் கொண்டால் ஒரு கிரிக்கெட் வீரனாக நமக்குப் பெருமையளிப்பதாக இருக்கும் என்று. ஆரம்பத்திலேயே இதுதான் எனக்கு உத்வேகமாக இருந்தது. இரு அணிகளின் கிரேட் வீரர்களை கண்டு களித்துள்ளேன், கற்றுக் கொண்டேன்.
ஆஸ்திரேலியர்கள் நேரடியாக நம்முடைய முகத்திற்கு நேராக மோதுபவர்கள், அச்சுறுத்துவார்கள். அதனால் தான் இங்கு வந்து அதையே நாமும் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது. ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு நபராகவும் என்னை வளர்த்தது. இங்கு வந்து ஆடுவது நம் மனோபலத்தை பரிசோதிப்பதாகும். ரசிகர்களுடன் ஒத்துப் போவது என்பது நாம் தப்பிக்கவேமுடியாது என்பது போன்ற தருணம், ஒவ்வொரு நாளும் அவர்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.
கெவின் பீட்டர்சன் எனக்கு நல்ல அறிவுரை வழங்கினார், அதாவது ஆஸ்திரேலியாவில் எப்போதும் நம் மீது பாய்ந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்கள் உள் மனதில் தங்கள் இருதயத்தில் நம்மைப் பாராட்டுபவர்களாகவே இருப்பார்கள். அதுவும் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தினால் எழுந்து நின்று பாராட்டுவார்கள். எனவே அவர்கள் பாயும்போது நம் தனிப்பட்ட விரோதமாகவோ நம் மனத்திற்குள்ளோ எடுத்துச் செல்லக் கூடாது என்றார் பீட்டர்சன்.
கெவின் பீட்டர்சன் கொடுத்த அறிவுரையினால் நான் இங்கு வந்து ஆடி பெற்ற அனுபவத்திற்கு எனக்கு நன்றிகளைக் கூறுவதைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. ஆஸ்திரேலிய ரசிகர்கள் எப்போதும் என்னை எதிர்கொண்டு ஆரவாரம் செய்வார்கள் அது என்னை உண்மையில் வளர்த்தெடுத்தது, என்னில் சிறந்தவற்றை வெளிக்கொணர்ந்தது” இவ்வாறு கூறினார் விராட் கோலி.