Last Updated:
அமெரிக்கா ஈரானில் அணுசக்தி நிலையங்களை தாக்கியதற்குப் பதிலாக, ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்களை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் ஏவுகணைகளை இடைமறித்தது.
இதன்படி, கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து வான்வழியாக ஏவப்பட்ட ஏவுகணைகளைக் கண்டு, தலைநகர் தோஹாவில் மக்கள் அலறியடித்து ஓடினர். அல் உதெய்த் விமானப்படைத் தளத்தை குறிவைத்து குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே நட்பு நாடாக இருந்தபோதும் கத்தார் மீது ஈரான் ஏன் தாக்குதல் நடத்தியது என நியூஸ் 18 தமிழ்நாடுக்கு தொலைபேசி வாயிலாக பேசிய பேராசிரியர் கிளாட்சன் சேவியர் விளக்கம் அளித்தார். அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவுக்கு உதவியதன் காரணமாகவே ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் பகுதியில் இருந்து தான் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக பேராசிரியர் கிளாட்சன் சேவியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆறு மணி நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்றும் 12 மணி நேரத்தில் ஈரான் தாக்குதலை நிறுத்தும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதற்கு அடுத்த 12 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் என்றும் 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தப் போர் பல ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய கிழக்குப் பகுதி முழுமையாக அழியும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் ஆனால், அது நடக்கவில்லை என்றும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் இஸ்ரேலுடன் தற்போதைக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் கிடையாது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரேல் தான் போரைத் தொடங்கியதாகப் பதிவிட்டுள்ளார். தங்கள் நாடு மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் தான் பதில் தாக்குதலை நிறுத்துவோம் என்றும் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
June 24, 2025 8:18 AM IST


