சென்னை: இந்தாண்டில் இன்னும் 9 ராக்கெட்கள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேசியதாவது: முதல்முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தரவுகள், உலகளாவிய விஞ்ஞானக் குழுக்களுக்கு வழங்கப்படும். எனவே, பல துறைகளில் ஆராய்ச்சிகள் பரவலாக செய்ய முடியும். நிசார் செயற்கைக்கோளின் மூலம் எடுக்கப்படும் தரவுகள் மட்டும் படங்களை எதிர்நோக்கி உலக நாடுகளில் உள்ள அனைத்து அறிவியல் சமூகங்களும் காத்திருக்கின்றன.
இந்தாண்டு இன்னும் 9 ராக்கெட் ஏவுதல்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில் எல்விஎம்-03 எம் 5 ராக்கெட் வாயிலாக தொலைத் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் -02 ஏவப்பட உள்ளது. தொடர்ந்து பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலமும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளும், ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் வாயிலாக என்விஎஸ்-03 செயற்கைக்கோள் ஆகியவை தொடர்ந்து ஏவப்பட உள்ளன. விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் குவாண்டம் கம்ப்யூட்டிங், எலக்ட்ரிக் புரரொப்லன்ட் உள்ளிட்ட 30 தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட உள்ளன.
இதுதவிர இஸ்ரோ-நாசா இடையே மீண்டும் ஒப்பந்தம் கையொப்பமிட உள்ளது. இதில் நாசாவின் ‘ப்ளூ பேர்டு பிளாக்-2 செயற்கைக்கோள் எல்விஎம் ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நாம் இதற்கு முன் பல்வேறு வெற்றிகரமான திட்டங்கள் மூலம் வரலாறு படைத்துள்ளோம். தற்போது இன்னும் சில புதிய தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இது நமது நாளைய சாதனைகளை மேலும் உறுதி செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.