கோலாலம்பூர்:
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை டிஏபி (DAP) தலைவர்கள் சிலர் கொண்டாடி வருவதாகக் கூறப்படுவது குறித்து அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய செயல்கள் அமையக்கூடாது. எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் வேலையை யாரும் செய்ய வேண்டாம்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜிப் தாக்கல் செய்த நீதித்தன்மை மறுஆய்வு மனுவை நிராகரித்தது. வீட்டுக் காவலில் மீதமுள்ள தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கும் அரச கூடுதல் உத்தரவை நிறைவேற்ற கோரிய மனு இதுவாகும். ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்தது.
இதற்கு DAP -யின் புச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின், “இந்த ஆண்டின் இறுதியில் கொண்டாடுவதற்கு மற்றொரு காரணம் கிடைத்துவிட்டது” என நஜிப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இப்பதிவிற்கு அம்னோவின் முக்கியத் தலைவர்களான டத்தோஸ்ரீ ஜாம்ரி அப்துல் காதிர் மற்றும் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருவரின் துன்பத்தைக் கொண்டாடுவது ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகல்ல என்று அவர்கள் சாடியுள்ளனர்.




