News By S.Gunalan
ஜார்ஜ்டவுன் ,
நகர்ப்புறங்களில் வாழும் பறவைகள் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருகின்றன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் விற்பனை மையங்கள், வீட்டு வளாகங்கள், சாலை விரிவாக்கங்கள், கபி நெடுஞ்சாலைகள், மின் கம்பிகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மொபைல் தொடர்பு கோபுரங்கள் ஆகியவற்றின் கட்டுமானம் அதிகரித்ததால், பறவைகளுக்குத் தங்கும் இடமாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் பறவைகள் வாழ்வதற்கு இடமின்றி தவிக்கின்றன என சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கவலை தெரிவித்தார்.
“கடந்த சில ஆண்டுகளில் நடைமுறையில் இருக்கும் சாலை விரிவாக்கங்கள் மற்றும் திறந்தவெளிகளை கான்கிரீட் அடுக்குகளாக மாற்றும் திட்டங்களால் நூற்றுக்கணக்கான மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் பறவைகள் கட்டிடங்கள், கூரைகள் மற்றும் மின் கம்பிகள் மீது கூடு கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சூரிய வெப்பம் அதிகரிப்பதால் குஞ்சுகள் உயிரிழக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.
சாலைப் பொறியாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடுபவர்கள் பறவைகளின் தேவைகளைப் புரிந்து கொள்ளாதிருப்பது கவலையளிக்கிறது. “மேம்பாட்டாளர்கள் பெரும்பாலும் பனை மரங்கள் போன்ற கவர்ச்சியான, ஆனால் பறவைகளுக்கு உகந்ததல்லாத இறக்குமதி தாவரங்களைத் தேர்வு செய்கின்றனர். இது பறவைகளின் வாழ்விடத் தேவைகளை புறக்கணிக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
பறவைகள் சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பாரம்பரிய உணவுச் சங்கிலியின் அங்கமாக இருந்து, எலிகள், கொறித்துண்ணிகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துகின்றன. கொக்குகள், தெந்நந்திகள் போன்றவை ஈரநிலங்களில் வாழ்ந்து, பூச்சிகள், நண்டு, மீன் போன்றவற்றை உண்டு, பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைக்க உதவுகின்றன. இதனாலேயே பறவைகள் விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை தருகின்றன.
மேலும், பறவைகள் வெளியிடும் இயற்கையான ஒலிகள், வண்ணங்கள் மற்றும் அசைவுகள் மனித மன நலத்தையும் வாழ்வின் தரத்தையும் உயர்த்துகின்றன. பறவைகளின் பங்களிப்பு, மகரந்தச் சேர்க்கை, விதைகள் பரவல், கழிவுகள் சுத்திகரிப்பு மற்றும் எலிகள் வேட்டையாடல் என பலவாக உள்ளது.
அதனால், பறவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம். மக்கள் பறவைகள் தரும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். பறவைகள் மீண்டும் நகர்ப்புறங்களை தங்களது இருப்பிடமாகக் கொள்ள, பழம், பூச்சிகள், விதைகள் போன்றவற்றை ஈர்க்கும் பூர்வீக மரங்களை நட்டு, தாவர பன்முகத்தன்மையை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.
“பறவைகள் பிறந்த இடங்களை இழந்து தவிக்கும் சூழலில் உள்ளன. இப்போது அவற்றிற்கு இடமளிக்க, மரங்களை வெட்டுவதை குறைத்து, சரியான மரங்களை நட்டுச் சுற்றுச்சூழலை புதுப்பிக்க வேண்டிய நேரமிது” எனும் வேண்டுகோளை மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் விடுத்துள்ளது.