துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பங்களிப்பும் இருந்தது. லீக் சுற்றில் இருந்து இறுதிப் போட்டி வரை வெவ்வேறு கட்டத்தில் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் இந்திய அணி வீரர்கள் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்தினர்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்ரேயஸ் ஐயர் முக்கியமான தருணங்கள் அனைத்திலும் அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைக்க உதவியிருந்தார். அதேவேளையில் கே.எல்.ராகுல் இறுதி கட்டத்தில் பதற்றம் இல்லாமல் நிதானமாக விளையாடி விதம் அற்புதமாக இருந்தது. கடந்தகால தொடர்களில் முக்கியமான தருணங்களில் அழுத்தத்தை சரியாக கையாளாமல் இந்திய அணி வெற்றிகளை வசப்படுத்தத் தவறியுள்ளது. ஆனால் இம்முறை தொடர் முழுவதுமே இந்திய அணி அழுத்தத்தை உட்கிரகித்து பதற்றம் இன்றி விளையாடி விதம் பாராட்டும் வகையில் இருந்தது.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கூறியதாவது:
நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பெற்று நீண்ட காலமாகிவிட்டது. இந்த வடிவம் சிறப்பானது. இதுதான் எங்கள் நோக்கம். கடினமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, நாங்கள் இங்கு வந்து பெரிய தொடரை வென்றுள்ளோம். இது ஒரு அணியாக மீண்டும் எங்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
தொடர் முழுவதும், வெவ்வேறு வீரர்கள் வெவ்வேறு போட்டிகளில் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். கடந்த தொடர்களில் எங்களால் ஆட்டங்களை முடிக்கவோ அல்லது முக்கியமான சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத தருணங்கள் இருந்தன. ஆனால் இந்த முறை, அந்த அனுபவங்களில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம்.
அதனால்தான் நீங்கள் அனுபவம் வாய்ந்த வீரர்களை ஆதரிக்கிறோம். – அவர்கள் இதற்கு முன்பு இந்த தருணங்களை எதிர்கொண்டனர். அந்த கற்றல்களைப் பயன்படுத்தி, கடினமாக உழைக்கும்போது, விஷயங்களைத் சாதகமாக திருப்புவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். கடைசி இரண்டு போட்டிகளையும் கே.எல்.ராகுல் முடித்த விதம் அந்த அனுபவத்திற்கு ஒரு சான்று. இதற்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து, வெற்றி கோட்டைத் தாண்ட முடியாதபோது, மற்றொரு வாய்ப்பைப் பெற்று அதைக் கடக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும். அதைத்தான் நாங்கள் இப்போது செய்தோம்.
எதிரணி எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பதை விட, தொடர் முழுவதும் எங்கள் திறமைகளில் மட்டுமே கவனம் செலுத்தினோம். 4 ஐசிசி தொடர்களை வெல்வது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம், இவ்வளவு காலம் விளையாடி இதைச் சாதித்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன். இவ்வாறு விராட் கோலி கூறினார்.
விராட் கோலி 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியிலும் அங்கம் வகித்திருந்தார்.