Tamilnadu
oi-Vishnupriya R
சென்னை: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் பதவியை பறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இவர் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தார்.
கொங்கு மண்டலத்தில் அதிமுகவில் கொடி கட்டி பறந்தவர் தோப்பு வெங்காடலம். ஈரோடு மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியவர். இவர் பெருந்துறை சட்டசபை தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர். இவர் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தோப்பு வெங்கடாசலத்திற்கு தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்த தோப்பு வெங்கடாசலம் அந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
அப்போது அவருக்கு திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரிடம் தோப்பு வெங்கடாசலம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களால் திமுகவின் எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில்தான் அவருடைய மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு மாவட்ட கழகச் செயலாளர்கள் அந்தந்த நிர்வகிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தோப்பு வெங்கடாசலத்தின் பதவி பறிப்புக்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம். தோப்பு வெங்கடாசலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் தோல்விக்கு முத்துசாமியும் காரணம் என சொல்லப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த தோப்பு, கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்தாராம்.
தற்போதைய பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டார். இந்த தொகுதிக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெல்ல எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறாராம். இதனால் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியில் தோப்பு இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த விவரம் திமுகவுக்கு தெரியவந்த நிலையில் தோப்பு வெங்கடாசலத்தின் பதவி பறிக்கப்பட்டது. எனவே அவர் விரைவில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையலாம் என சொல்லப்படுகிறது.




