கோலாலம்பூர்,
தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ஜூலை 9-ஆம் தேதியளவில் மொத்தம் 434 நிறுவனங்களுக்கு 34,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடுகள் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தோட்ட மற்றும் பொருட்கள் அமைச்சகம் (KPK) இன்று தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு ஒப்புதல்கள், குறிப்பாக தோட்டத் துறையில் உள்ள பணியாளர் பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியாகும் என்று அதன் துணை அமைச்சர் டத்தோ சான் ஃபூங் ஹின், மக்களவையில் கேள்வி பதில் நேரத்தில் தெரிவித்தார்.
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ கே கூ ஹாம், தோட்டத் துறையில் (முக்கியமாக செம்பணை மற்றும் ரப்பர்) தொழிலாளர் பற்றாக்குறை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர், “பற்றாக்குறையைச் சமாளிக்க, வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சிறப்பு ஒதுக்கீடுகளை அரசாங்கம் வழங்கியுள்ளது,” என்றார்.
குடிவரவுத் துறை புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதியளவில் தோட்டத் துறையில் 2,58,153 தற்காலிக வேலை அனுமதிச் சீட்டு (PLKS) பெற்ற தொழிலாளர்கள் உள்ளனர். இருப்பினும், இது இன்னும் போதுமானதாக இல்லை என்றும், அனுமதி காலாவதியான பிறகு தாய்நாட்டிற்கு திரும்பியவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, 30,000 முதல் 40,000 தொழிலாளர்கள் கூடுதலாக தேவைப்படுவதாக தொழில்துறை தெரிவித்துள்ளதாக சான் குறிப்பிட்டார்.




