நியூஸ்18 சார்பில் நடைபெற்ற DEFCON 2026 நிகழ்ச்சியில் பேசிய ராஜேஷ் சிங், வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழலை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கேற்ப நாட்டின் பாதுகாப்புத் துறை தயாராக வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களை முதலில் விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO-வில் எதிர்கால தொழில்நுட்பப் போக்குகளை கண்காணிக்கும் (horizon scanning) பிரிவு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், ஆயுதப் படைகளிலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்றங்களை அடையாளம் காணும் அமைப்புகள் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். “தொழில்நுட்ப மாற்றத்தை முதலில் கண்டறிந்து புரிந்துகொள்பவர்கள் விஞ்ஞானிகளாக இருக்க வேண்டும். DRDO-வில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றங்களை அடையாளம் காண தொடர்ந்து எதிர்காலக் கணிப்புகள் மேற்கொள்ளும் ஒரு பிரிவு உள்ளது. இதேபோன்ற அமைப்புகள் ஆயுதப் படைகளிலும் உள்ளன” என்று ராஜேஷ் சிங் தெரிவித்தார்.
தலைமைத்துவக் கண்ணோட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொழில்நுட்பத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று ராஜேஷ் சிங் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், பிரதமர் மோடி புதிய தொழில்நுட்பங்கள், புத்தாக்கங்கள் மற்றும் யோசனைகளை பலரைவிட வேகமாக அடையாளம் காண்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில், தொழில்நுட்ப மாற்றங்களை அடையாளம் கண்டு அதற்கு பதிலளிப்பது எந்தவொரு தனிநபரையும் மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது என்றும், அதனை நிறுவனமயமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழல் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மோதல்களில் ஏற்படும் மாற்றங்கள், பாதுகாப்புத் துறையில் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான இந்தியாவின் சமீபத்திய அனுபவங்களிலிருந்தும், பிற நாடுகளில் நடைபெறும் மோதல்களில் இருந்து கிடைக்கும் அனுபவங்களிலிருந்தும் தொடர்ந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.
“போர்க்களத்திலிருந்து கற்றுக்கொள்ளும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த அனுபவங்கள் நமது கொள்முதல் நடைமுறையில் உள்ளீடுகளாகச் சேர்க்கப்படுகின்றன” என்று கூறினார். இந்த அனுபவங்கள் எதிர்கால பாதுகாப்பு கொள்முதல் நடவடிக்கைகளுக்கும், தொழில்துறையின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
போர்க்கள அனுபவங்களிலிருந்து கிடைக்கும் பாடங்கள், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் திட்டங்களை உருவாக்குவதற்கும் உதவுவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். அரசுத் துறை நிறுவனங்களுடன் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள், குறு-சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களையும் பயன்படுத்தி, பெரிய அளவில் பன்முகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உற்பத்தி சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறினார்.
பாதுகாப்புத் துறையில் ஒரே ஒரு நிறுவனத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது என்றும், பல்வேறு தொழில்துறை பங்குதாரர்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு கொள்முதல் நடவடிக்கைகளில் அரசின் வாங்கும் சக்தி முக்கியப் பங்கு வகிப்பதாக ராஜேஷ் சிங் தெரிவித்தார். பாதுகாப்புத் துறையில் ஒரே ஒரு பெரிய வாங்குபவர் இருப்பதால், அரசின் கொள்முதல் நடவடிக்கைகள் தொழில்துறையைத் தொடர்ந்து செயல்பட வைக்க உதவும் என்றும், எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய ஆர்டர்கள் குறித்து நிறுவனங்களுக்கு தெளிவான பார்வையை வழங்குவது அவசியம் என்றும் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புத் துறைக்கான கொள்முதல் ஆணைகளின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கமாக ஆண்டுக்கு சுமார் ரூ.50,000 கோடி முதல் ரூ.80,000 கோடி வரையிலான ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் குறிப்பாக ட்ரோன்களுக்கு விரைவான கொள்முதல் நடைமுறையை அதிகளவில் பயன்படுத்த அரசு விரும்புவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். அதன்படி, ட்ரோன் போன்ற தொழில்நுட்பங்களுக்கான ஒப்பந்தங்கள் 6 முதல் 8 மாதங்களுக்குள் கையெழுத்தாக வேண்டும் என்றும், ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குள் விநியோகம் நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.
வேகமாக மாறும் தொழில்நுட்பங்களுக்கு வழக்கமான நீண்டகால பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை போதுமானதாக இருக்காது என்பதால், புதிய தொழில்நுட்பங்களுக்கான கொள்முதல் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டிய தேவை இருப்பதாக விளக்கினார்.
தற்போதைய நடைமுறையில் ரூ.3,000 கோடிக்கு மேற்பட்ட திட்டங்கள் அமைச்சரவையின் பரிசீலனைக்கு செல்ல வேண்டியுள்ளது என்றும் ராஜேஷ் சிங் குறிப்பிட்டார். தனால், வேகமாக மாறிவரும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கான கொள்முதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகார வரம்பை அதிகரிக்க வேண்டியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிதல், போர்க்கள அனுபவங்களில் இருந்து தொடர்ந்து கற்றுக்கொள்வது மற்றும் அந்தப் பாடங்களை கொள்முதல் நடைமுறைகளில் இணைப்பது ஆகியவை எதிர்கால பாதுகாப்புத் தயார்நிலைக்கு முக்கியமானவை என்று ராஜேஷ் சிங் வலியுறுத்தினார். DRDO-வில் எதிர்கால தொழில்நுட்பங்களை கண்காணிக்கும் தனிப்பிரிவு செயல்பட்டு வருவதாகவும், ஆயுதப் படைகளின் அனுபவங்களும் புதிய கொள்முதல் முடிவுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தி, புதிய தொழில்நுட்பங்கள், ட்ரோன்கள், தனியார் துறை மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாதுகாப்புத் திறனை தொடர்ந்து மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

