கோலாலம்பூர்,:
மலேசியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை, தொழிலாளர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தங்களது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தைச் செலுத்தத் தவறிய 430 முதலாளிகள் மீது அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
தீபகற்ப மலேசிய தொழிலாளர் துறையின் (JTKSM) இயக்குநர் கமால் பார்டி இது குறித்த முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தொழிலாளர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்த 31 நாட்களுக்குள் முதலாளி பணத்தைச் செலுத்தத் தவறினால், அந்த விவகாரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு (Magistrate’s Court) கொண்டு செல்லப்படும்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்துமாறு உத்தரவிடப்படும்.
மெங்கும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு செலுத்தப்படும் நிலுவைத் தொகைக்கு ஆண்டு வட்டியும் (Interest per annum) சேர்க்கப்படும்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் முதலாளிகள் பணத்தைச் செலுத்தத் தாமதப்படுத்தினால், தொழிலாளர்கள் அமைதியாக இருக்க வேண்டாம் என்று கமல் பார்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
“அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கத் தாமதமாவதாகத் தொழிலாளர்கள் உணர்ந்தால், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டு அடுத்தகட்ட நடவடிக்கையைக் கோர வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
1955-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 69(4)-இன் கீழ், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத முதலாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால்:
50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
குற்றம் தொடரும் பட்சத்தில், தீர்ப்புக்குப் பிந்தைய ஒவ்வொரு நாளுக்கும் தலா 1,000 ரிங்கிட் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
தொழிலாளர்களின் உழைப்பிற்கான ஊதியத்தை உறுதி செய்வதில் அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்று தொழிலாளர் துறை மீண்டும் எச்சரித்துள்ளது.




