கோலாலம்பூர்:
கிளந்தான், குவா மூசாங்கில் உள்ள கம்போங் ஃபெல்டா சிலி பகுதியில், 35 வயதுடைய தோட்ட மேலாளர் ஒருவர் இரும்புக் கம்பிகள் போன்ற ஆயுதம் ஏந்திய கும்பலால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
தாக்குதலுக்குள்ளான நபர் முகமட் ஃபாய்ஸ் முகமத் என்ற தோட்ட மேலாளர் என்றும், தோட்ட அலுவலக வளாகத்தில் சில தொழிலாளர்களுடன் இருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இரும்புக் கம்பிகளை வைத்திருந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை நோக்கி வந்து சரமாரியாகத் தாக்கியுள்ளது. அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததைக் கண்ட அக்கூட்டம் உடனடியாகச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியது.
தாக்குதலில் அவரது கைகள் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தொழிலாளர்கள் அவரை உடனடியாகச் சிகூ கிளினிக்கிற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகக் கோலா கிராயில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இச்சம்பவம் குறித்துத் தொழிலாளர்களில் ஒருவர் பிற்பகல் 12 மணியளவில் பாலோ போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.
குவா மூசாங் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் சிக் சூன் ஃபூ இப்புகாரை உறுதிப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டப்பிரிவு 148 (ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல்) மற்றும் பிரிவு 326 (பயங்கர ஆயுதங்களால் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்துப் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தொழிலாளர்கள் கண்முன்னே நிகழ்ந்த அத்துமீறல்: படுகாயமடைந்த மேலாளர் மருத்துவமனையில் அனுமதி; போலீஸ் விசாரணை ஆரம்பம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

