ரயில் கட்டுப்பாட்டாளர்கள் (Railway Controllers) புதன்கிழமை (10) மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் ரயில் சேவைகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளக்கூடும் என ஸ்ரீலங்கா ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் (SLRCU) எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்தச் சங்கத்தின் செயலாளர் ருக்மல் பண்டார தெரிவிக்கையில்: “இன்று இரவு புறப்படும் ரயில்கள் தங்களது பயணங்களை நிறைவு செய்யும் வரை தடையின்றி இயக்கப்படும். எனினும், நாளை (புதன்கிழமை-10) காலை சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ரயில்களின் ஊழியர்களும் பணிக்கு சமூகமளிக்க மாட்டார்கள்.”
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடு தழுவிய ரீதியில் வழமையான ரயில் போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
வேலைநிறுத்த காலகட்டத்தில், மாற்று வழிகளை பயன்படுத்தி ரயில்களை இயக்குவதற்கு முற்படும் “சட்டவிரோத முறைகளுக்கு” ஆதரவு வழங்க வேண்டாம் என ஸ்ரீலங்கா ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்திற்கு (SLRSMU) ருக்மல் பண்டார அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்தத் திடீர் வேலைநிறுத்தத்தினால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்காக, அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள மாற்று ஏற்பாடுகள் மற்றும் சேவைகளில் மாற்றங்கள் குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

