[ad_1]
தோக்கியோ:
பதவியேற்று ஓராண்டுக்குள் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வால் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரது ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி (எல்டிபி) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தது. தற்போது, கூட்டணிக் கட்சியான கெமெய்டோவின் ஆதரவில் தான் எல்டிபி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
செப்டம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கட்சிக்குள் நீடித்து வந்த நெருக்கடியைத் தவிர்க்கும் நோக்கில், கட்சித் தலைவராக இருந்த பதவியிலிருந்து விலகுவதாக திரு. இஷிபா அறிவித்தார். அவரது உரை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
“பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்க மாட்டேன் என்று எப்போதும் கூறியுள்ளேன். தேர்தல் முடிவுகளுக்குப் பொறுப்பு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமெரிக்காவுடன் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், பதவி விலகுவதற்கான சரியான தருணம் இதுவே,” என அவர் தெரிவித்தார். அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தாம் பதவியில் தொடருவார் என்றும் அவர் கூறினார்.
தொடர் தோல்விகள்
78 வயதான இஷிபா, கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் அதற்குப் பின்னர் அதே மாதம் நடந்த கீழவைத் தேர்தலில் எல்டிபி கட்சி தோல்வியடைந்தது. இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தோக்கியோ பெருநகர மன்றத் தேர்தலிலும், ஜூலை மாதம் நடைபெற்ற மேலவைத் தேர்தலிலும் தொடர்ந்து எல்டிபி தோல்வியடைந்தது.
மூன்று தோல்விகளுக்குப் பிறகு, கட்சிக்குள் இருந்தே அவரது பதவி விலகலுக்கான கோரிக்கை அதிகரித்தது.
அபேவுக்குப் பிறகு மூன்றாவது ராஜினாமா
ஜப்பானின் நீண்டகால பிரதமராக இருந்த ஷின்சோ அபே 2020ஆம் ஆண்டு பதவி விலகிய பின்னர், அவரால் ஏற்பட்ட வெற்றிடத்தை எல்டிபி நிரப்ப முடியாமல் தவித்துவருகிறது. அபே 2022ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் கட்சிக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அபேவுக்குப் பிறகு, பிரதமர் பதவியைத் துறக்கும் மூன்றாவது தலைவர் இஷிபா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த பிரதமர் யார்?
அடுத்த பிரதமருக்கான போட்டியில் வேளாண்மைத் துறை அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி (44) மற்றும் முன்னாள் பொருளியல் பாதுகாப்பு அமைச்சர் சனே தகாய்ச்சி (64) முன்னணியில் உள்ளனர். தலைமைத்துவத் தேர்தல் குறித்த முடிவை எடுக்க எல்டிபி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று (செப்டம்பர் 8ஆம் தேதி) நடைபெற உள்ளது.